(UTV | சென்னை) – ஷாரூக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகிவிட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஷாரூக்கான். அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட்டது.
தற்போது ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதால், இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆர்யன் கான் ஜாமீனில் வெளியில் வந்தவுடன் மீண்டும் ஷாரூக்கான் படப்பிடிப்பில் கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, இந்தப் படத்தில் ஷாரூக்கானுக்கு நாயகியாக நயன்தாரா நடித்து வந்தார். இது இந்தியில் நயன்தாரா நடிக்கும் முதல் படமாகும். தற்போது ஷாரூக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக சமந்தா நடிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக நயன்தாரா தரப்பில் விசாரித்தபோது, “இதில் உண்மையில்லை. எப்போது படப்பிடிப்பு தொடங்கினாலும் அதில் நயன்தாரா நடிப்பது உறுதி” என்று தெரிவித்தார்கள்.
அட்லி படம் மட்டுமன்றி, ஷாரூக்கான் கவனம் செலுத்தி வந்த இதர படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.