உள்நாடு

மெழுகுவர்த்திகளை வாங்கி வைக்குமாறு பொதுமக்களிடம் கோருகிறோம்

(UTV | கொழும்பு) –  கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் அரசின் செயற்பாட்டுக்கு எதிராக மின்சாரசபை தொழிற்சங்கம் நேற்று(27) அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் மூன்றாம் திகதிக்கு முன்னர் குறித்த யுகதனவி ஒப்பந்தம் மீளப்பெறாவிட்டால் அரசு பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடுவதாக குறித்த இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்திருந்தார்.

திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தம் தான் தமது கடைசி முயற்சி என்றும், போதுமான அளவு மெழுகுவர்த்திகளை வாங்குமாறு மக்களிடம் கூற வேண்டும், இல்லையெனில் எரிவாயு, பால்மா போன்று மெழுகுவர்த்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

யுகதனவி உடன்படிக்கை மற்றும் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக நாளை (29) முதல் பல வேலைநிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இந்த வேலைநிறுத்தமே அதன் இறுதி நடவடிக்கையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை மீளப்பெறுமாறு கோரி எதிர்வரும் 3ஆம் திகதி பகல் 12.00 மணிக்கு கொழும்பில் உள்ள இ.போ.ச தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மின்சார ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

எண்ணெய் மற்றும் துறைமுக ஊழியர்களும் தங்களது அலுவலகங்களுக்கு வந்து போராட்டத்திற்கு ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் கையொப்பமிடப்பட்ட இந்த மனு அன்றைய தினமே ஜனாதிபதி செயலகத்திற்கு மாபெரும் பாதயாத்திரையாக சென்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அன்றைய தினம் மின் உற்பத்தி நிலையங்களில் அத்தியாவசிய பணியாளர்கள் மாத்திரம் பணியமர்த்தப்படுவதோடு ஏனைய அனைவரும் கொழும்புக்கு வருவார்கள் எனவும் மின்சாரம் தடைபட்டால் மின்சார விநியோகத்தை மீளமைப்பது கடினமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாளை (29) முற்பகல் 11.30 மணிக்கு மனுவொன்று கைச்சாத்திடப்பட்டு மதியம் 12.00 மணிக்கு தொழிற்சங்கத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக நாடளாவிய ரீதியில் 18 இடங்களில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

குளியாப்பிட்டி, குருநாகல், அநுராதபுரம், காலி, தங்காலை, இரத்தினபுரி, கிரிபத்கொட, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் லக்ஷபான இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அலுவலகங்கள், கண்டி மற்றும் கொழும்பு நகர அலுவலகங்கள், தெஹிவளை மற்றும் எத்துல்கோட்டே வலய அலுவலகங்கள் மற்றும் சபுகஸ்கந்த, களனிதிஸ்ஸ, களனிதிஸ்ஸ ஆகிய இடங்களுக்கு முன்பாகவும், மின் உற்பத்தி நிலையத்திற்கு முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசாங்கத்துடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது எனவும் இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்திருந்தார்.

ஆர்.ரிஷ்மா

Related posts

பாராளுமன்றக் கலைப்பிற்கு இன்னும் 54 நாட்கள் – டலஸ்

அங்குலான பதற்ற நிலை சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது

இன்று முதல் ரூ.5000 நிவாரண கொடுப்பனவு