(UTV | துபாய்) – டி20 போட்டியில் மோதல் என்று வந்துவிட்டால், இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும் என்று சென்னை அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
சென்னை (CSK) அணியில் இருக்கும் வீரர்களில் பலரும் வயதானவர்கள். குறைந்தபட்சம் 35 வயதுக்கு மேலானவர்கள் என்பதால் டேடிஸ் ஆர்மி (Dad’s Army) என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டது. சில நேரங்களில் இந்த அனுபவ வீரர்களால் சிறப்பான பேட்டிங், பந்துவீச்சு தரமுடியாமல் போகும்போது, இதே டேடிஸ் வார்த்தையைக் கூறி கிண்டல் செய்ததும் உண்டு.
ஆனால், அதிக அனுபவம் கொண்ட வயதான வீரர்களை வைத்துக் கொண்டுதான் தோனி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். கெப்டன் தோனிக்கு 40 வயதாகிறது என்றாலும் அணியில் இளைஞர்களுக்கு இணையாக விளையாட வேண்டும் என்பதால் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
சிஎஸ்கே அணியின் மூத்த வீரரான அதிக அனுபவம் கொண்ட மே.இ.தீவுகள் சகலதுறை வீரர் டுவைன் பிராவோவிடம், டேடிஸ் ஆர்மி குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில்:
“முதலில் நான் என்னுடைய செல்போனை ஸ்விட்ச் ஆன் செய்யப் போகிறேன். நான் 16-வது ஐபிஎல் சாம்பியன் வெல்கிறேன் என்பதை அறிய பொலார்ட் ஆர்வமாக இருப்பார். இந்த வீரர்கள் மீது அணி நிர்வாகம், உரிமையாளர்கள் அனைவரும் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
கடந்த சீசன் எங்களுக்கு மிகவும் வேதனை தரக்கூடியதாக இருந்தது. அணி நிர்வாகத்தினரும் கவலைப்பட்டனர். ரசிகர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதால் இந்த சீசனில் சிறந்த பங்களிப்பை அளித்தோம்.
இறுதிப் போட்டிக்கு வந்தபின் நாங்கள் பதற்றப்படவில்லை. போட்டித் தொடரின் பல்வேறு கட்டங்களில் சிறப்பாகவே விளையாடி இருக்கிறோம். எங்களுக்கு டூப்பிளசிஸ், கெய்க்வாட் இருவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இருவரும் இணைந்து 500 ஓட்டங்களுக்கு மேல் சேர்த்தனர்.
ஒன்று சொல்கிறேன். மோதல் என்று வந்துவிட்டால், இளைஞர்களை அனுபவம் எந்த நாளிலும் தோற்கடிக்கும். என்னுடைய பெயரை மிஸ்டர் சாம்பியன் என்பதற்கு பதிலாக சாம்பியன் சார் என்று மாற்றப் போகிறேன்”.