(UTV | கொழும்பு) – எதிர்வரும் 17,18ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“.. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் உரத்தினை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளார்கள். குறிப்பாக தென் பகுதியிலும் இந்த பிரச்சினையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக தென் பகுதியில் அரசுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் விவசாய அமைச்சரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
தற்போது நாட்டில் உள்ள கோவிட் தொற்று பரவல் காரணமாக மக்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்வது நல்ல விடயம் அல்ல. அது சமூகப் பொறுப்புக்கும் மாறானது என்பதை கருத்திற் கொண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து கமநல சேவை நிலையங்களுக்கும் முன்னால் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மாத்திரம் ஒரே நேரத்தில் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்..” எனத் தெரிவித்திருந்தார்.