(UTV | கொழும்பு) – தாமரைக் கோபுர கருத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது பூர்த்தியடைந்து வருவதுடன், குறித்த வர்த்தகமயப்படுத்தல் மற்றும் தொழிற்பாடுகளைத் திட்டமிடுவதற்காக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அக்கோபுரத்திற்கு அண்மையிலுள்ள பேரவாவியை அண்டிய பகுதியில் நவீன நீர் அலங்காரக் காட்சிப் பூங்காவை நிர்மாணித்தல், உணவு விற்பனை நிலையங்களை அமைத்தல், குறித்த கோபுரத்தில் பணியில் அமர்த்துவதற்கு எதிர்பார்க்கும் பணியாளர்களுக்கான அலுவலகம், தங்குமிடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை குறித்த தொகுதியில் நிர்மாணித்தல், தற்போது திட்டமிடப்பட்டுள்ள வாகனத்தரிப்பிடத்தை மேலும் விரிவாக்கம் செய்தல் போன்ற அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கருத்திட்டத் தொகுதியை சுற்றியுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான 04 ஏக்கர் 03 ரூட் மற்றும் 24.47 பேர்ச்சர்ஸ் காணியை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்காக தொழிநுட்ப அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.