(UTV | இத்தாலி) – இத்தாலியின் மிலன் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (03) மிலன் புறநகரில் உள்ள ஒரு ஆளில்லாத இரண்டு மாடி அலுவலக கட்டடத்தின் பக்கத்தில் இந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
மிலனின் உள்ள விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய அந்த விமானம் சர்தீனியா தீவை நோக்கி பயணித்தைத் தொடங்கியது.
ஆனால் கிளம்பிய சற்று நேரத்திலேயே மிலன் நகரின் புறநகர் பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது.
எனினும், இந்த விமானம் விழுந்து நொறுங்கி பொழுது தரையில் இருந்த யாருக்கும் காயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சான் டோனாடோ மிலானீஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த இந்த விபத்தில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் தீக்கிரையாகின என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ருமேனியாவின் பணக்காரர்களில் ஒருவரான ரியல் எஸ்டேட் அதிபர் டான் பெட்ரெஸ்கு (68) இந்த விமானத்தை இயக்கியதாக இத்தாலிய ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தி வெளியிட்டன.
அவர் தனது மனைவி ரெஜினா டொரோட்டியா மற்றும் அவர்களின் மகன் டான் ஸ்டெஃபானோவுடன் இறந்தார் என்று கொரியர் டெல்லா செரா செய்தித்தாள் மற்றும் ஏஜிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு இத்தாலிய தொழிலதிபர், பிலிப்போ நாசிம்பீன், அவரது மனைவி கிளாரி ஸ்டெபனி கரோலின் அலெக்ஸாண்ட்ரெஸ்கோ மற்றும் அவர்களது இளம் குழந்தையும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ரய் அரச தொலைக்காட்சி, உயிரிழந்தவர்கள் அனைவரும் பிரான்ஸ் நாட்டவர்கள் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இந்தத் தகவலை இத்தாலிய அதிகாரிகள் இன்னும் உறுதி செய்யவில்லை.