உள்நாடு

அரச ஊழியர்களுக்கான சுற்றுநிருபம் வெளியானது

(UTV | கொழும்பு) –  பொது சேவைகளை வழமை போல முன்னெடுப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாடு மீளத் திறக்கப்படும் செயற்பாடுகளின்போது, அரச அலுவலகங்கள் ஊடாக வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ஆளணியினரை அடையாளம் கண்டு, கடமைக்கு அழைக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு ஊழியர்களைச் சேவைக்கு அழைக்கும் அதிகாரம் நிறுவன பிரதானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகப்பூர்வ வாகனங்களைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு மேற்படி நியதி பொருந்தாது எனவும், அவர்கள் வழமை போலக் கடமைக்குச் சமுகமளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடமைகளுக்கு அழைக்கப்படும் அதிகாரிகளைத் தவிர்ந்த மற்றைய அனைவரும் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்ற வேண்டும் என்றும், கடமைகளுக்காக அலுவலகத்துக்கு அழைக்கப்படும் ஊழியர்கள் பணியல்லா நாட்களில் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்ற வேண்டும் எனவும் குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடமைக்கு அழைக்கப்படும் அதிகாரிகள் மற்றும் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்றும் ஊழியர்களுக்கான வசதிகள் வழங்குதல் மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களின்போது வேறு இடங்களில் கடமையாற்ற தற்காலிகமாக வாய்ப்பளிக்கும் அதிகாரம் அமைச்சின் செயலாளர் மற்றும் நிறுவன பிரதானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு, அரச நிறுவனங்களுக்கு ஊழியர்கள் கடமைக்கு அழைக்கப்படும்போது கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், விசேட நோய் நிலைமைகளைக் கொண்டவர்களைக் கடமைக்கு அழைக்க வேண்டாம் எனவும் அவ்வாறானவர்களின் சேவை கட்டாயம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவர்கள் கடமைக்குச் சமுகமளிக்கவும், வீடு செல்லவும் விசேட கால எல்லை மற்றும் வசதிகளை வழங்க நிறுவனத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், சுகாதார துறை ஊழியர்களைக் கடமைக்கு அழைக்கும் விதம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

ஜீவன் தொண்டமான் இங்கிலாந்து அமைச்சர்களுடன் கலந்துரையாடல்!

சுகாதார அமைச்சின் வேண்டுகோள்

அஜித் பிரசன்ன மீண்டும் விளக்கமறியலில்