உலகம்

ஜப்பானிற்கு புதிய பிரதமர்

(UTV |  ஜப்பான்) – ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானின் பிரதமராக இருந்த யோஷிடே சுகா மீது பரவலாக அதிருப்தி உருவானது. கொரோனா பெருந்தொற்றைக் கையாண்ட விதத்தால் அவர் மீது அதிருப்தி எழுந்தது.

இந்நிலையில், வெளியுறவு அமைச்சராக இருந்த இவரின் செல்வாக்கு அமைச்சரவையில் 30 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது. இதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

இதனையடுத்து, ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி புதிய பிரதமரை தேர்வு செய்யும் தேர்தலை நடத்தியது.

இத்தேர்தலில் தாரோ கோனோ, ஃபுமியோ கிஷிடா, சனாயி தகாச்சி, செய்க்கோ நோடோ ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான ஃபுமியோ கிஷிடாவுக்கும் தாரோ கோனாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. தாரோ கோனா தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்தியதில் பிரபலமடைந்திருந்தார். தன்பாலின உறவை ஆதரிப்பதாகப் பேசி ஜப்பான் இளைஞர்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றவர்.

ஆனால், ஃபுமியோ கிஷிடோ ஜப்பானின் அடுத்த பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிஷிடா 2012 முதல் 17 வரை ஜப்பானின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அவர் ரஷ்யா, தென் கொரியா நாடுகளுடன் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்கப் பாலமாக இருந்திருக்கிறார்.

அணு ஆயுத ஒழிப்பே தனது வாழ்நாள் இலட்சியம் என்று கூறுபவர். ஆனால், தன்பாலின உறவை ஆதரிப்பது, தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது போன்றவற்றில் கிஷிடா வெளிப்படையாக இதுவரை எதுவும் தெரிவித்ததில்லை.

1993 ஆம் ஆண்டு தான் கிஷிடா அரசியலில் காலடி எடுத்து வைத்தார். அதற்கு முன்னர் அவர் வங்கியில் பணிபுரிந்து வந்தார். பேஸ்பால் என்றால் அவருக்கு அலாதி பிரியம். முன்னாள் பிரதமர் சுகா டீ டோட்டலர் என்றால், கிஷிடா அவ்வப்போது அளவாக மதுவையும் ருசிக்கக் கூடியவர் என்ற ருசிகரமான தகவலும் வெளியாகியுள்ளது. கிஷிடாவின் மனைவியின் பெற்றோர் மதுபான தயாரிப்புத் தொழிலில் உள்ளனர்.

கிஷிடா தனது சிறுவயதில் பெற்றோருடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்துள்ளார். அங்கு இனவெறி பிரச்சினைகளால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த அனுபவங்கள் தனக்கு நீதியின் வலிமையை உணரச் செய்ததாகவும் அவர் சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

Related posts

புதிய வகை கொரோனாவுக்கும் தடுப்பூசி உறுதி

இந்தியாவில் கைதான ஐஎஸ் நபர்கள்: இலங்கை நண்பர் ஒருவரும் கைது

கொரோனா வைரஸ்; 16 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை