(UTV | சென்னை) – விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படம், 2022-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட நாளாக நிலவி வந்த வதந்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ வெளியாகும் எனத் தகவல் வெளியாகி வந்தது. இதன் மூலம் விஜய்யின் ‘பீஸ்ட்’ மற்றும் அஜித்தின் ‘வலிமை’ என இரண்டிற்கும் நேரடிப் போட்டி என்று செய்திகள் வெளியாகின. இதனை வைத்து இரண்டு தரப்பு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் திட்டி ட்வீட்களை வெளியிட்டு வருகிறார்கள்.
‘பீஸ்ட்’ வெளியீடு தொடர்பாக விசாரித்தபோது, “தற்போது டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் சில காட்சிகள் மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் நவம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அப்படியிருக்கும்போது, பொங்கல் வெளியீடு என்பது சாத்தியமில்லை. கோடை விடுமுறைக்குத்தான் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறை வெளியீடாகத் திரைக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகையால் இப்போதைக்கு ‘வலிமை’ படம் மட்டுமே பொங்கலுக்கு வெளியாகும்” என்று தெரிவித்தார்கள்.