(UTV | ஐக்கிய அரபு அமீரகம்) – ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் டி 20 தொடரின் எஞ்சிய போட்டிகளை நேரில்கண்டுகளிக்க குறைந்த அளவிலான ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கரோனாபெருந்தொற்று காரணமாக கடந்தமே மாதம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை வரும் 19-ம் திகதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவுசெய்துள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
19-ம் திகதி நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துபாய், ஷார்ஜா மற்றும்அபுதாபியில் கொரோனா நெறிமுறைகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசாங்க விதிமுறைகளை மனதில் கொண்டு குறைந்த அளவிலான ரசிகர்களுடன் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும். தொடரின் அனைத்து ஆட்டங்களுக்கான டிக்கெட்களை ரசிகர்கள் இணையதளம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் முன்னிலையில் நடத்தப்பட உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் அனைத்து ஆட்டங்களும் ஐக்கியஅரபு அமீரகத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது.
அதேவேளையில் இந்த ஆண்டுக்கான முதற்கட்ட போட்டிகள் கடும்கட்டுப்பாட்டுகளுடன் இந்திய மைதானங்களில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றது. இம்முறை 50சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.