(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 வது தொடர் ஜெனீவாவில் இலங்கை நேரப்படி இன்று (13) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகின்றது.
இதன் போது மனித உரிமை கூட்டத் தொடரின் 46வது கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இன நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான யோசனைகள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் தமது கருத்துக்களை முன்வைக்க உள்ளார்.
கூட்டத் தொடரின் 47 உறுப்பு நாடுகளும் இதனை முன்வைக்க உள்ளன. இது தொடர்பிலான கருத்தாடல்களும் இடம்பெறவுள்ளன. இதன் போது சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பல கருத்துக்களை முன்வைக்க உள்ளதுடன் அரசாங்கம் சார்பில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி இது தொடர்பில் விடயங்களை முன்வைக்க உள்ளார்.
இலங்கையைத் தவிர ஆப்கானிஸ்தான், நிக்கரகுவா, எத்தியோப்பியா, மியன்மார் மற்றும் யெமன் போன்ற நாடுகளின் மனித உரிமை விடயம் தொடர்பிலும் ஆணையாளர் தனது கருத்துக்களை முன்வைப்பார்.