உலகம்

ஆப்கானிஸ்தானில் தாலிபானின் இடைக்கால அமைச்சரவை

(UTV | காபூல்) – ஆப்கானிஸ்தானைக் கைபற்றிய தலிபான்கள் அங்கு இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப் போவதாக அறிவித்து, அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் நேற்று வெளியிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு எதிராகப் போராடிய தலிபான்கள் வசம் தற்போது அந்நாடு வந்துவிட்டது. அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியவுடன் ஆப்கானிஸ்தானை தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்துள்ளனர், அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் அறிவித்துள்ளனர்.

தலிபான்கள் அறிவித்துள்ள அமைச்சரவையில் ஒரு பெண் கூட இல்லை. கடந்த முறையைப் போன்று ஆட்சி இருக்காது, பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும், கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை போன்றவை வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்த நிலையில் அமைச்சரவையில் ஒரு பெண் கூட இல்லை.

அமைச்சரவையில் இடம் பெற்ற பெரும்பாலான தலிபான்கள், தீவிரமான அடிப்படைவாதிகள், மதக்கோட்பாடுகளையும், அரசியல் விதிகளையும் சிறிதுகூட விலகாமல் கடினமாகக் கடைபிடிக்கக்கூடியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனில் அமையும் இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசில் 33 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் அடுத்தடுத்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் சைஹைல் ஷாகீன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபி நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலிபான் தீவிரவாத அமைப்பை நிறுவிய முல்லா ஓமரின் நெருங்கிய உதவியாளர் முல்லா முகமது ஹசன் அகுந்த். கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டுவரை தலிபான் ஆட்சியில் அகுந்த் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.

முல்லா ஓமரின் மகன் மவுலவி முகமது யாகூப் முஜாஹித் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராக மவுலவி சிராஜ் உத்தின் ஹக்கானி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க எப்பிஐ அமைப்பால் தேடப்படும் தீவிரவாதியாக சிராஜ் உத்தின் ஹக்கானி அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் அரசில் பதவி வகிப்பதால், அமெரிக்கா, ஆப்கன் இடையிலான உறவும் மேம்படுவது கடினம்தான். அனைத்து நாடுகளுடனும் சுமூகமான உறவு வைத்திருப்போம் எனத் தலிபான்கள் கூறிய நிலையில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது அமெரிக்கா, தலிபான் இடையிலான உறவை பாதிக்கும்.

வெளியுறவுத்துறைஅமைச்சராக தோஹாவில் தலிபான் சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய மவுலவி அமிர் கான் முதாகி நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை அமைச்சராக முல்லா ஹிதயத்துல்லா பத்ரியும், கல்வித்துறை அமைச்சராக நூருல்லா முனிரும், பொருளாதார விவகாரத்துறை அமைச்சராக குவாரி தின் முகமது ஹனிப் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பிலிப்பைன்ஸில் உயிரிழந்த உலகின் சோகமான யானை!

ட்ரம்ப் கணக்கினை ஆட்டங்காட்டிய ட்விட்டர்

ரஷ்யா – உக்ரைன் : நான்காவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பம்