உள்நாடு

இலங்கையில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் 75 வது சுதந்திர தினம்

(UTV | கொழும்பு) – பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை வாழ் பாகிஸ்தானிய சமூகத்தினர் பாகிஸ்தானின் 75 வது சுதந்திர தின”வைரவிழாவை” இன்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் கொண்டாடினர்.

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கட்டக் பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

திருமதி ஆயிஷா அபூ பக்கர் ஃபஹாத், இரண்டாவது செயலாளர் (அரசியல்) பாகிஸ்தான் ஜனாதிபதி கெளரவ டாக்டர் ஆரிஃப் ஆல்வியின் செய்தியை வாசித்தார். இதில் “பாகிஸ்தானியர்கள் விவேகம் மிக்க மற்றும் தைரியமான மக்களாவார்கள். இதனால், பல்வேறு துறைகளில் மகத்தான வெற்றிகளைப் பெற்று,மற்ற நாடுகளிலிருந்து தனித்துவமானதாக விளங்குகிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நீண்டகாலமாக போராடி வென்ற உண்மையை உலகம் பாராட்ட வேண்டும்.இதேபோல், பாகிஸ்தான் அணுசக்தி தடுப்பு வளர்ச்சியானது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு பெரிய சாதனையாகும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் பிரதமரின் செய்தி பார்வையாளர்களுக்காக திருமதி அஸ்மா கமால், வர்த்தக செயலாளர் அவர்களால் வாசிக்கப்பட்டது. அந்தச் செய்தியில் : “சுதந்திர தினத்தை முன்னிட்டு நாம் நமது தேசியக் கொடியை ஏற்றி வைக்கும்போது, காஇத்-இ-ஆஸம் முஹம்மது அலி ஜின்னா உருவாக்க நினைத்த ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்தினால் கட்டியெழுப்பப்பட்ட நாடு என்ற உறுதியான தீர்மானத்தை நாம் மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும். நமது வரலாற்றை நோக்கும் போது , ஒற்றுமையான, அமைதியான மற்றும் நெகிழ்ச்சி தன்மைகொண்ட தேசமாக உருவெடுக்க நாம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளோம். இப்பொழுதும் கூட , மாறிவரும் பிராந்திய நிலைமைகளும், சில உள்நாட்டு பிரச்சனைகளும் தொடர்ந்து நம் தீர்மானத்தை சோதித்துப்பார்க்கின்றன. ஆனால், ஒவ்வொரு முறையும் போலவே, இச் சோதனைகளையும் எங்கள் தனிச்சிறப்புப்பண்புகளால் வென்று ஒரு சிறந்த தேசமாக சக்தி பெறுவோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கருத்துத்தெரிவிக்கையில், பாரிய சவால்களை எதிர்கொண்டு, பாகிஸ்தானின் கனவை அடைய ஈடு இணையற்ற தியாகங்களை மேற்கொண்ட, நமது எதிர்காலத்திற்காக அவர்களது வாழ்வை தியாகம் செய்த தேசத்தின் முன்னோர்களை நினைவுபடுத்தினார். வல்லமையுள்ள அல்லாஹ்விக்கு நன்றி தெரிவிக்கும் நாளான இன்று, தேசத்தின் உயரிய நோக்கங்களாக உள்ள ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்தை தொடர்ந்து கடைபிடிப்போம் என்ற நமது உறுதிமொழியை புதுப்பிக்கும் நாளான ஆகஸ்ட் 14 என்பது ஆனந்தத்தின் நாளாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கை-பாகிஸ்தான் உறவு குறித்து உயர் ஸ்தானிகர் கருத்துத்தெரிவிக்கும் போது, பாகிஸ்தான் பரஸ்பர மரியாதை, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பின் அடிப்படையில், இலங்கையுடனான அதனது உறவுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் பாகிஸ்தான் எப்போதுமே இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை அனைத்து அரங்குகளிலும் அளித்து வருவதாகவும், அது எப்போதும் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பாகிஸ்தான் சமூக உறுப்பினர்கள், உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் மற்றும் குடும்பங்கள், உள்ளூர் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பாகிஸ்தான் நலன் விரும்பிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கொழும்பு: 14 ஆகஸ்ட், 2021

Related posts

பாராளுமன்றில் இரண்டு சட்டமூலங்கள் நிறைவேற்றம்.

MT New Diamond – நட்டஈடாக 440 மில்லியன் ரூபா [UPDATE]

அரச வேலை வாய்ப்பு – தெரிவு செய்யப்படாத பட்டதாரிகளுக்கு அறிவித்தல்