(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை இன்றைய தினம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
சமூகத்தில் உள்ள வயோதிபர்கள், நோய் பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் பலவீனமானவர்களின் நலன் கருதி இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய, முதற்கட்ட தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவுள்ளவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்பு கொண்டு முற்பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவ நோய் தடுப்பு மற்றும் மனநல மருத்துவ பணியகத்தின் 1906 அல்லது 011 28 60 002 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு முற்பதிவு செய்வதன் ஊடாக தடுப்பூசிகளை வீட்டிலேயே செலுத்திக்கொள்ள முடியும் என கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறே கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, பதுளை, கிளிநொச்சி, அநுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையங்கள் பலவற்றில் இராணுவத்தினரால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, இலங்கை காவல்துறையினர் மற்றும் கொழும்பு மாநகரசபை இணைந்து நடத்தும் கொவிட் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு முகத்துவாரம் மிஹிஜய செவன சனசமூக நிலையத்திலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையத்தில் இன்றுகாலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கொவிட் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே, கொழும்பு மாநகரசபை அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டோர் மேற்படி தடுப்பூசி செலுத்தல் மையத்தில் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.