விளையாட்டு

முதல் முறையாக காலிறுதியில் இந்திய மகளிர் அணி

(UTV |  டோக்கியோ) – டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஹாக்கிப் பிரிவில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

கடந்த 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய அணி அறிமுகமாகியது. அப்போது மகளிர் பிரிவில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்றன. ரவுண்ட் ராபின் முறையில் நடந்த அந்த போட்டியில் இந்திய அணி 4-வது இடத்தைப் பிடித்தது. அதன்பின் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணி லீக் சுற்றோடு வெளியேறிவிட்ட நிலையில் ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்குப்பின் ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

திங்கட் கிழமை நடக்கும் காலிறுதி ஆட்டத்தில் பி பிரிவில் முதலிடம்பிடித்த ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய மகளிர் அணி மோதுகிறது. வலிமையான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது இந்திய அணிக்கு கடினம்தான் என்றாலும், கடந்த இரு லீக் ஆட்டங்களில் செயல்பட்டதைப் போல் சிறப்பாக ஆடினால் ஆஸ்திரேலிய அணியை தோற்கடிக்கலாம்.

ஏ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பிரிட்டன் அணி தோற்கடித்தது. அயர்லாந்து அணியின் இந்த தோல்வியால் இந்திய அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

அயர்லாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளை அடுத்தடுத்து வென்றதன் மூலம் ஏ பிரிவில் 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.

குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்திய வீராங்கனை வந்தனா ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை ஒருவர் ஹாட்ரிக் கோல்கள் அடிப்பது இதுதான் முதல்முறையாகும், அந்த வகையில் வந்தனா வரலாறு படைத்துள்ளார்.

இந்திய அணி சார்பில் வந்தனா 4-வது நிமிடம், 17-வது மற்றும் 49-வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனை படைத்தார். 32-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நேகா கோயல் ஒரு கோல் அடித்தார்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் 15-வது நிமிடத்தில் டேரின் கிளாஸ்பே, கேப்டன் எரின் ஹன்டர் 30-வது நிமிடத்திலும், 39-வது நிமிடத்தில் மரிஜென் மரியாஸும் கோல் அடித்தனர்.

Related posts

கோலியின் தலைமைத்துவம் தொடர்பில் புதிய கருத்து

“மஞ்சள் அணிவது ஒரு பெரிய விஷயம்” – பிஞ்ச்

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து படேல் ஓய்வு