(UTV | கொழும்பு) – முழு பிராந்தியத்துடனும் ஒப்பிடும்போது பாகிஸ்தான் சுற்றுலாத்துறைக்கு சாத்தியமான பல இடங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்றும், சுற்றுலாத்துறையின் முழு பயன்பாட்டையும் அடைவதற்கு தன் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த திங்களன்று குறிப்பிட்டார்.
பாகிஸ்தானை இப்பிராந்தியத்தின் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றவும், முதலீடு மற்றும் அந்நிய செலாவணியை நாட்டினுள் கொண்டுவரவும் அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாகிஸ்தானில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த மறுஆய்வுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதமரின் சிறப்பு உதவியாளர் டாக்டர் ஷாபாஸ் கில், கைபர் பக்துன்க்வா முதலமைச்சர் மெஹ்மூத் கான், முதலமைச்சரின் சுற்றுலாத்துறை ஆலோசகர் ஆசிப் மெஹ்மூத் கான், நான்கு மாகாணங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடியோ இணைப்பு மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு முக்கிய தளங்களில் இதுவரை மேற்கொள்ளபட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் , சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், கலாச்சார விழாக்களின் நாட்காட்டியை அவற்றின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தயாரிக்க வேண்டும் என்றும் இதனால் சுற்றுலாப்பயணிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் இந்த விழாக்களில் பங்கேற்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
சுற்றுலா தளங்களில் முதலீட்டை ஈர்க்கவும் , அபிவிருத்தி அடையவும் உதவும் விதமாக அனைத்து மாகாணங்களிலும் உள்ள சுற்றுலாத் தளங்கள் புவி வரைபடத்தில் குறிப்பது கணிசமான அளவு நிறைவடைந்துள்ளது என்றும் கலாச்சார விழாக்கள் உள்ளடங்கிய நாட்காட்டியும் (காலெண்டர்) தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து விவரங்களும் விரைவில் சுற்றுலா வலைத்தளங்கள் மற்றும் சுற்றுலா e-portal தளங்களில் பதிவேற்றப்படும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் ஆசாத் காஷ்மீர் ஆகிய பிராந்தியங்களில் சர்வதேச தரத்திற்கு ஏற்ப சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நந்தனா கோட்டையின் அபிவிருத்திப் பணிகளின் துவக்கம் மற்றும் முன்னேற்றம் குறித்தும், நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக வெளியுறவு அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விளக்கப்பட்டது.
பாகிஸ்தான் தூதரகங்களின் முயற்சியால், பல நாடுகள் பாகிஸ்தான் தொடர்பான அந்நாடுகளின் பயண ஆலோசனைகளில் சாதகமான மாற்றங்களைச் செய்துள்ளதாகவும், அதே நேரத்தில் பாகிஸ்தானில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக பாகிஸ்தான் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் 24 தூதரகங்களுக்கு சுற்றுலாத்துறை விளம்பர ஊக்குவிப்பு பொருட்களை வழங்குவதாகவும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 27 தூதரகங்களில் தனியான ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 133 வெளிநாட்டு சுற்றுலா நிறுவனங்களுக்கு பாகிஸ்தானில் செயல்பட உதவி வழங்கப்பட்ட்டுள்ளதகாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக இ-விசா 7-10 நாட்களுக்குள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் 71,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இதுவரை இ-விசா வசதியை பெற்றுள்ளனர் என்றும் கூறப்பட்டது.
பலூசிஸ்தானில் கடலோர சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது. பலூசிஸ்தானில் சுற்றுலாத்துறைக்கான பகுதிகளை அவற்றின் வளர்ச்சிக்கான திட்டத்துடன் அடையாளம் காண அறிவுறுத்திய பிரதமர், பலூசிஸ்தானின் கடற்கரை இயற்கை அழகைக் கொண்டதாக இருப்பதாகவும், அவற்றை மேம்படுத்த எண்ணற்ற முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் ஓய்வு இல்லங்களைப் பற்றி குறிப்பிடுகையில், இந்த பொது நிதியுதவி கொண்ட கட்டிடங்கள் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் பயன்படுத்துவதற்கான திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார்.
காண்ட் மாலிர் மற்றும் மரைன் டிரைவ் குவாடர் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கான ஓய்வு விடுதிகளை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டடுள்ளதாகவும், இது தவிர, மீன் தரையிறங்கும் இடங்கள், மிதக்கும் ஜெட்டிகள், சிறிய மீன்பிடி படகுகள், கடலோர நெடுஞ்சாலைகளில் ஓய்வு பகுதிகள் மற்றும் கடலோர பூங்காக்கள் ஆகியவைகள் நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டடுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சித்ரால், சைது ஷெரீப், இஸ்லாமாபாத், மற்றும் ஸ்கர்து ஆகிய விமான நிலையங்களில் தனியான விசேட பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் சர்வதேச விமான சேவையின் எயார் சஃபாரி (AIR SAFARI) சேவை கூட செயல்பட்டு வந்தது என்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.