வகைப்படுத்தப்படாத

நாட்டுக்கு பாதகமான எந்தவொரு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடப்படமாட்டாது – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – நாட்டுக்கு எந்தளவு பொருளாதார நலன்களைக் கொண்டுவந்தாலும் நாட்டுக்கு பாதகமான பொருத்தமற்ற எந்தவொரு முதலீட்டு, வர்த்தக உடன்படிக்கைகளிலும் எந்தவொரு நாட்டுடனும் கையொப்பம் இடப்படமாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சக்திவலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் நீண்டகால மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், நாட்டின் மின்னுற்பத்தியின்போது சுற்றாடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கி பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக பொருத்தமான கலப்பு மின்னுற்பத்தியை மேற்கொள்ளும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய சக்திவலு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பிரயோக ரீதியாக அபிவிருத்தி செய்யக்கூடிய அனைத்து சக்திவலு மூலங்களையும் தந்திரோபாயமாக பயன்படுத்துதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய சக்திவலு உற்பத்திக்காக எரிபொருள் மூலங்களாக இயற்கை வாயு நிலக்கரி, மசகு எண்ணை போன்ற பெற்றோலிய எரிபொருட்கள், காற்று சூரிய சக்தி, உயிரியல் எரிசக்தி, கடலலை, திண்மக்கழிவுகள் போன்ற புதுப்பிக்கத்தக்க சக்திவலு மூலங்கள் மற்றும் அணுசக்தியையும் பொருத்தமானவாறு பயன்படுத்தக்கூடிய முன்மொழிவுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

பாரிஸ் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காபன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகளை அமுல்படுத்தலின் முன்னேற்றம் தொடர்பாகவும் இதன்போது கலந்தரையாடப்பட்டது.

இந்த கூட்டத்தில் சக்திவலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிற்றிய பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா , அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அலுவலர்களும் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Related posts

உலகின் மிக நீளமான ’வெள்ளை யானை’ கடல் பாலம் திறந்து வைப்பு

President instructs Officials to accelerate Moragahakanda

ஐக்கிய அமெரிக்க பிரதி செயலாளர், மங்கள சரவீரவை சந்திப்பு