(UTV | கொழும்பு) – கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் MV X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இடைக்கால இழப்பீட்டு நிதி கிடைத்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய 720 மில்லியன் ரூபா நிதி, திறைசேரியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இந்நிதியில் அதிகளவான தொகையை கப்பல் தீ விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, கப்பல் தீப்பற்றியதால் நேரடியாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முதலில் நட்டஈட்டை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு வழங்கக்கூடிய நட்டஈடு தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.