(UTV | கனடா) – கனடாவில் வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கனடா நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து வெப்ப அலை வீசி வருகிறது.
அங்குள்ள லிட்டன் என்கிற கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இதுவரை இல்லாத வகையில் 49.6 செல்சியஸ் டிகிரி வெப்பம் பதிவானது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்ப நிலையால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
மேலும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொரோனோ தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி 7 நாட்களில் மட்டும் 719 பேர் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இது வழக்கத்தை விட 3 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
மேலும், கொளுத்தும் வெயில் காரணமாக லிட்டன் கிராமத்தில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. காட்டுத்தீ அந்த கிராமத்தில் பெரும் பொருள் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.