விளையாட்டு

போட்டி நமக்குக் கைகூடா நிலையில் முடிந்தது – கோஹ்லி

(UTV |  இங்கிலாந்து) – இந்தியா – நியூஸிலாந்து இடையே நடந்த உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டதை வென்றது வில்லியம்ஸன் தலைமையிலான நியூஸிலாந்து அணி.

 

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்தது. மழை காரணமாக முதல் நாள் மற்றும் நான்காம் நாள் கைவிடப்பட்டது.

மழை காரணமாக ஆறாம் நாள் வரை நடந்த இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 217 ரன்களும் , இரண்டாவது இன்னிங்ஸில் 170 ரன்களும் இந்திய அணி எடுத்தது. இதன் மூலம் வெற்றி இலக்காக இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்துக்கு 139 ரன்களை இந்திய அணி நிர்ணயித்தது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை நம்பிக்கையுடன் தொடங்கிய நியூஸிலாந்து அணி 42 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இரண்டு விக்கெட்டுகளை இந்திய அணியின் நட்சத்திரச் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் எடுத்தார்.

இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தபிறகு ஜோடி சேர்ந்த வில்லியம்ஸனும், ராஸ் டெய்லரும் இந்திய அணியின் பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்டு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.

தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி கூறியதாவது:

“ரிஷப் பந்த் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறப்பாகவே செயல்பட்டார். போட்டி நமக்குக் கைகூடா நிலையில் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். நாம் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்காவிட்டால் நாம் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வீரர்கள் அவுட் ஆவது குறித்து வருத்தப்படக் கூடாது. ரிஸ்க் எடுக்க வேண்டும். ரன்கள் எடுப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தப் போட்டியில் பந்துவீச்சாளர்களைக் குறைகூற முடியாது. நாம் எதிர் அணிக்கு 300 ரன்களை வைத்திருந்தால் நம்மிடம் உள்ள பந்துவீச்சாளர்கள் மூலம் நாம் அவர்களுக்கு அழுத்தத்தை அளித்திருக்க முடியும்” என கோஹ்லி தெரிவித்தார்.

    

Related posts

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி

மந்தனாவை பார்க்க 1270 கிமீ. தாண்டி வந்த சீன ரசிகர்!

ஆஸியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து