உள்நாடு

கடன்களை மீளப்பெறும் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைக்கவும்

(UTV | கொழும்பு) – கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களின் கடன்களை மீளப்பெறும் போது அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (16) அலரி மாளிகையில் வைத்து மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து மத்திய வங்கி அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது தொடர்பில் இதன்போது மத்திய வங்கி பிரதிநிதிகள் கௌரவ பிரதமருக்கு விளக்கமளித்தனர்.
இவ்வாறான தொற்று நிலைமைக்கு மத்தியில் நிதிக் கடன்களை பெற்றுக்கொண்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விசேட கவனம் செலுத்தினார்.

எனவே கடன்களை மீளப்பெறும் போது கடன்களை பெற்றுக்கொண்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கௌரவ பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தவணை கட்டணங்களை செலுத்தும் போது வட்டி தொகையை முதலில் செலுத்த வேண்டியிருப்பதால் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு கடனாளிகள் தள்ளப்பட்டுள்ளதுடன், வட்டி மற்றும் கடன் தொகையை செலுத்துவதற்கான முறையில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பிலும் இதன்போது கௌரவ பிரதமர் கவனம் செலுத்தினார்.

குறித்த சந்திப்பில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன், மத்திய வங்கியின் துணை ஆளுநர்களான கே.எம்.எம்.சிறிவர்தன, எம்.டப்ளிவ்.ஜீ.ஆர்.டீ.நாணாயக்கார, மத்திய வங்கியின் உதவி ஆளுநர்களான ஜே.பீ.ஆர்.கருணாரத்ன, ஏ.ஏ.எம்.தாஸீம், பொருளாதார மற்றும் ஆராய்ச்சி பணிப்பாளர் சீ.அமரசேகர, வங்கி அல்லாத நிதி நிறுவன ஆராய்ச்சி பணிப்பாளர் சமன் நாணாயக்கார உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Related posts

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய திட்டம்

MV Xpress pearl : இன்று சட்ட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 433 பேர் கைது