உலகம்

இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட்

(UTV |  இஸ்ரேல்) – இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் (49) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தன. அந்தக் கூட்டணி அமைத்துள்ள புதிய அரசுக்கு பாராளுமன்ற அங்கீகாரம் அளிப்பதற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் வலதுசாரி யாமினா கட்சியின் தலைவரான நாஃப்டாலி பென்னட் தலைமையிலான புதிய அரசு வெற்றி பெற்றது. 120 உறுப்பினா்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன. ஒரு உறுப்பினா் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதையடுத்து, இஸ்ரேலின் 13-ஆவது பிரதமராக நாஃப்டாலி பென்னட் பதவியேற்றாா். புதிய அரசில் 27 அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் 9 பேர் பெண்கள்.

நாஃப்டாலி பென்னட் தலைமையிலான கூட்டணியில் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதல்முறையாக ஓா் அரபுக் கட்சியும் இடம்பெற்றுள்ளது.

யெஷ் அடிட் கட்சித் தலைவரான யாயிா் லபீட்டுடன் பென்னட் அதிகார பகிா்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளாா். அதன்படி, முதல் இரு ஆண்டுகள் பென்னட்டும், அடுத்த இரு ஆண்டுகள் லபீட்டும் பிரதமராகப் பதவி வகிப்பாா்கள்.

புதிய அரசுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, நெதன்யாகு தலைமையிலான 12 ஆண்டுகால தொடா் ஆட்சி முடிவுக்கு வந்தது.

1996 முதல் 1999 வரை பிரதமராகப் பதவி வகித்த நெதன்யாகு, 2009-ஆம் ஆண்டுமுதல் தொடா்ந்து 12 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வந்தாா்.

Related posts

எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவிய நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை

ஒமைக்ரொனின் தீவிரம் குறித்து WHO எச்சரிக்கை

ஜப்பான் பிரதமர் 2வது முறையாகவும் வைத்தியசாலைக்கு