உள்நாடு

மங்களூருவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இலங்கையர்கள் கைது

(UTV |  மங்களூர், இந்தியா) – மங்களூருவில் சட்டவிரோதமாக சுமார் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தங்கியிருந்த 38 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் வெளிநாட்டு பிரஜைகள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக மத்திய குற்றவியல் பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, நகர் முழுவதும் பொலிசார் சோதனை நடத்தி கண்காணித்து வந்த நிலையில் நகரின் இரண்டு வீடுகளில் தங்கியிருந்த 38 இலங்கை தமிழர்கள், மத்திய குற்றவியல் பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மங்களூர் நகர காவல் ஆணையர் சசிகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“..மார்ச் மாதம் 17ஆம் திகதியன்று இலங்கையிலிருந்து 39 தமிழர்கள் புறப்பட்டு கடல் மார்க்கமாக தமிழகத்தின் தூத்துக்குடிக்கு நுழைந்துள்ளனர். தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்ததால் பாதுகாப்பு காரணமாக பேருந்துகள் மூலம் ஒன்றரை மாதங்களுக்கு முன் பெங்களூரு அழைத்துவரப்பட்டு, அங்கிருந்து மங்களூரு அழைத்து வந்துள்ளனர். இரண்டு விடுதிகள் மற்றும் இரண்டு வீடுகளில் தங்கியிருந்த 38 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் இலங்கைக்கு சென்று விட்டதாக கூறினர். ஆனாலும் அவரையும் தேடி வருகின்றோம். கனடாவில் கூலி வேலை வாங்கித்தருவதாக கூறி ஒவ்வொரு நபரிடமிருந்து இந்திய மதிப்பில் ஒரு மில்லியன் ரூபா வரை இலங்கையை சார்ந்த முகவர்கள் பெற்றுள்ளனர்.

மங்களூரில் இருந்து கள்ளத் தோணிகள் மூலம் கனடா செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் கடவுச்சீட்டு கிடையாது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக கைது செய்துள்ளோம். வெவ்வேறு கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பெங்களூருவை சேர்ந்த 6 பேரை பிடித்து, அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.” என்றார்.

இதனிடையே இலங்கையிலிருந்து கனடா நாட்டுக்கு செல்ல கள்ளத்தோணியில் தூத்துக்குடி வழியாக மதுரை வந்து தங்கியிருந்த 23 பேர் மற்றும் முகவர்கள் ஒருவர் என 24 பேரை கியூ பிரிவு பொலிசார் கைது செய்த மற்றொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இலங்கையை சேர்ந்த சிலர் மதுரை கப்பலூரில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக 10 நாட்களாக தங்கியிருப்பதாக கியூ பிரிவு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனை செய்ததில் இரண்டு சிங்களர்கள் உட்பட 21 தமிழர்கள் இருந்தனர். விசாரணையில் கனடா நாட்டிற்கு தங்களை அனுப்புவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டு மதுரை கூடல்நகர் அசோக்குமார் தங்க வைத்ததாகக் கூறினர். பொலிசார் தேடுவதையறிந்து அசோக்குமார் தலைமறைவானார். அவரது வீட்டில் பொலிசார் சோதனை நடத்தியிருந்தனர். இந்நிலையில், சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 23 பேர் முகவர் ஒருவர் என 24 பேரை நேற்று கியூ பிரிவு பொலிசார் கைது செய்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

இது தொடர்பாக பொலிசார் கூறியதாவது, கனடா நாட்டில் இலங்கையை சேர்ந்தவர்களுக்கு விசா தருவது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் பல்வேறு தொழில்கள் செய்கின்றனர். அவர்களிடம் வேலை செய்ய 23 பேர் விரும்பி அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அசோக்குமார் தொடர்பு கொண்டுள்ளார். இவரது சகோதரி சியாமளா தேவி இலங்கை அங்கொட லொக்கா இறந்த விவகாரத்தில் போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்ததாக கைதானவர். இவர்களின் குடும்பத்திற்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. அதன் அடிப்படையில் 23 பேரை சட்டவிரோதமாக அசோக்குமார் அழைத்து வந்துள்ளார். சில போலி ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளோம். அசோக்குமாரரிடம் விசாரணை நடைபெற்றால் முழுமையான விவரங்கள் தெரியவரும்.’ என்றனர்.

இதனிடையே மதுரையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள், புத்தளம் மாவட்டம் சிலாபத்துறையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

   

Related posts

அரச ஊழியர்களின் சம்பளம் வெள்ளியன்று

‘வீட்டில் இருந்து வேலை’ – இன்று முதல் அமுலுக்கு

மத்திய வங்கியின் கணக்காய்வு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை [VIDEO]