உள்நாடு

இவ்வார பாராளுமன்ற அமர்வு செவ்வாய் மாத்திரம்

(UTV | கொழும்பு) –  கொவிட்-19 தொற்றுநோய் சூழல் காரணமாக இவ்வார பாராளுமன்ற அமர்வை நாளை (ஜூன் 08ஆம் திகதி) மாத்திரம் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

‘இதற்கமைய நாளை (08) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை பாராளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படும்” என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக தெரிவித்தார்.

நாளை முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை நிதி முகாமைத்துவப் (பொறுப்பு) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, 2020ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளை, ஏற்றுமதி இறக்குமதி (கட்டளை) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

‘அன்றைய தினம் நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது” என செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்காதும், மதியபோசனத்துக்காக சபை நடவடிக்கைகளை இடைநிறுத்தாதும் தொடர்ந்தும் விவாதத்தை முன்னெடுத்துச் செல்ல தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய இன்றைய கூட்டத்தில் சபை முதல்வரும் வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்தன, ஆளும் கட்சியின் முதற்கோலாசானும் பெருந்தெருக்கள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாந்து, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வாசுதேவ நாணயகார, அலி சப்ரி, பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், பீல்ட் மார்ஷன் சரத் பொன்சேகா, கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு மக்களுக்கான நிவாரண தொகை வழங்கும் திட்டம் ஆரம்பம்

நாளைய மின்வெட்டினை 5 மணி நேரமாக குறைக்க ஆலோசனை

வியாழன்று மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக கப்ரால்