(UTV | சிரியா) – கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் ஜனாதிபதி ஆசாத் மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அப்துல்லா சலூம் அப்தல்லா, மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மஹ்மூத் அகமது மரே ஆகிய இருவர் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஜனாதிபதி பதவியை ஆசாத் தக்க வைத்தார். தொடர்ந்து 4-வது முறையாக சிரிய ஜனாதிபதியாக பஷார் அல் அசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், இந்தத் தேர்தல் வெறும் கண் துடைப்பிற்கு நடத்தப்படும் தேர்தல் என்றும் ஆசாத் அதிபர் பதவியில் இருக்கும் வரை தேர்தல் நேர்மையாக நடைபெற வாய்ப்பில்லை என்றும் பிரான்ஸ். ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
சிரியா அதிபர் ஆசாத், அவரது தந்தையின் எதிர்பாராத மரணத்தைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு முதலில் ஜனாதிபதியானார். அதன் பிறகு நடைபெற்ற அனைத்து ஜனாதிபதி தேர்தல்களிலும் ஆசாத் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தேர்தலில் முறைகேடுகளை நடத்தியே அவர் வெற்றி பெற்றதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.