(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற ) முஹம்மத் சாத் கட்டக் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை 2021 மே 26 அன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், கல்வி ஒத்துழைப்பு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும்,பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான கலாச்சார பாரம்பரியம் மற்றும் மத சுற்றுலாவை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
மத சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகள் குறித்து உயர் ஸ்தானிகர் பிரதமருக்கு விளக்கமளித்தார். குறிப்பாக அண்மையில் பெளத்த பிக்குகளின் பாகிஸ்தான் விஜயம் மற்றும் இலங்கை திரைப்பட தயாரிப்பாளருடன் இணைந்து பாகிஸ்தானில் காந்தாரா பெளத்த பாரம்பரியத்தின் மகத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு ஆவணப்படம் தயாரிப்பு ஆகியவை குறித்து உயர் ஸ்தானிகர் பிரதமருக்கு விளக்கமளித்தார்.
மேலும், அண்மையில் அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அரசு வழங்கிம் அல்லாமா இக்பால் புலமைப்பரிசிலின் கீழ் அனைத்து துறைகளிலும் இலங்கை மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய உயர் கல்வி வாய்ப்புகள் குறித்தும் பிரதமருக்கு உயர் ஸ்தானிகர் விளக்கபடுத்தினார்.
இரு சகோதர நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உயர் ஸ்தானிகர் வலியுறுத்தியதோடு இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க பாகிஸ்தான் எப்போதும் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.இரு நாடுகளுக்கிடையில் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதோடு, மத சுற்றுலாவை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தவதாகவும் கலந்துரையாடப்பட்டது.
பணம் மற்றும் மூலதன சந்தை , நிறுவன சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சர் திரு.அஜித் நிவார்ட் கப்ரால், துணை உயர் ஸ்தானிகர் திரு.தன்வீர் அஹமத், சங்கைக்குரிய அக்ரஹேரா கஸ்ஸப தேரர் மற்றும் திரைப்பட , ஆவணப்பட இயக்குநர் திருமதி கௌசல்யா விக்ரமசிங்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.