(UTV | புதுடெல்லி) – இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 2 அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாட உள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வருகிற 2ம் திகதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 6 டெஸ்டில் விளையாடுகிறது.
நியூசிலாந்துடன் முதலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டத்தில் (ஜூன் 18-22) ஆடுகிறது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14ம் திகதி வரை இந்த டெஸ்ட் தொடர் நடைபெறும்.
இந்த காலகட்டத்தில் மற்றொரு இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூலை 13 முதல் 27ம் திகதி வரை இந்த போட்டி நடைபெறும்.
விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப்பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத அணி இலங்கையில் விளையாட உள்ளது. தவான் இந்த அணிக்கு கேப்டனாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்ட்யா, பிரித்வி ஷா உள்ளிட்ட திறமையான வீரர்கள் இலங்கையில் ஆட இருக்கிறார்கள்.
இந்திய அணி ஜூலை 5ம் திகதி இலங்கை புறப்பட்டு செல்லும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. விரைவில் இதற்கான இந்திய அணி அறிவிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் வீரர்கள் கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பார்கள். இந்த தனிமை காலம் முடிந்தபிறகு அவர்கள் இலங்கை செல்வார்கள்.
இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.