(UTV | கொழும்பு) – நாட்டில் அமுலில் இருந்த பயணத்தடை நிலைமை, இன்று அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 31ஆம் திகதி வரையில், புதிய பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் இருக்குமென, பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
அந்த வகையில், இன்று (17) முதல் 31ஆம் திகதி வரையில், ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில், முழு நாட்டுக்குமான பயணத்தடை விதிக்கப்படுவதோடு, ஏனைய நேரங்களில், தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தின் அடிப்படையிலேயே, அத்தியாவசியக் காரணத்துக்காக, வீட்டிலிருந்து நபர்கள் வெளியேற முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இரட்டை இலக்கத்தையுடைய நாளாயின், அடையாள அட்டையின் இறுதி இலக்கம் இரட்டை எண்ணாக (0, 2, 4, 6, 8) உள்ளவர்கள் மாத்திரமே, அத்தியாவசியத் தேவைக்காக மட்டும், அன்றைய தினத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியும். அத்துடன், ஒற்றை இலக்கத்தையுடைய நாளாயின், அடையாள அட்டையின் இறுதி இலக்கம் ஒற்றை எண்ணாக (1, 3, 5, 7, 9) உள்ளவர்கள் மாத்திரமே, அத்தியாவசியத் தேவைக்காக மட்டும், அன்றைய தினத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியும். உதாரணத்துக்கு, இன்றைய தினம் 17ஆம் திகதி என்பதால், ஒன்றை இலக்கத்தில் முடியும் அடையாள அட்டையை உடையோர் மாத்திரமே வீட்டை விட்டு வெளியேற முடியும்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதியும் கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணியின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, “கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணிக்குப் பிறப்பிக்கப்பட்ட முழு நாட்டுக்குமான பயணத் தடை, இன்று (17) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படுகிறது” என்றார்.
இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த அவர், இந்தப் பயணத்தடை தளர்த்தப்பட்ட பின்னர், ஒன்றுகூடல்களை நடத்துவதையோ அல்லது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் இருப்பதையோ தவிர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
எதிர்வரும் 2 – 3 வாரங்களுக்கு, சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ள சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை நாட்டுக்குள் கட்டுப்படுத்த முடியுமென்று தெரிவித்தார்.
இதேவேளை, இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன, பயணத்தடை கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும், அத்தியாவசியக் காரணமின்றி, எவரும் வீடுகளிலிருந்து வெளியேற முடியாது என்றும் அத்தியாவசியக் காரணத்துக்காக வெளியே செல்வதாயினும், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரமே வெளியே செல்ல முடியுமென்றும் தெரிவித்தார்.
அதுவும், வீட்டுக்கு அருகில் காணப்படும் நுகர்வோர் சேவையைப் பெறக்கூடிய இடங்களுக்கு மாத்திரமே செல்ல முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.