உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடரும் மோதல்

(UTV |  ஜெருசலேம்) – இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த திங்கட்கிழமை முதல் கடுமையான மோதல் நிலவி வருகிறது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையே, ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இரு தரப்பு மோதலில் இதுவரை மொத்தம் 133 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் காசா முனையில் ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட 126 பேரும், இஸ்ரேலில் 7 பேரும் (கேரளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட) உயிரிழந்துள்ளனர்.

மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காசா முனை மீது தாக்குதல் நடத்த விமானப்படையுடன் சேர்த்து தரைப்படையையும் இஸ்ரேல் களமிறக்கியுள்ளது. இதனால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காசா முனையில் வசித்து வந்த பாலஸ்தீனர்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.

Related posts

ஹமாஸ்-இஸ்ரேல் போர்: நான் விட்டிருக்க மாட்டேன்-ஜோ பைடனை விமர்சிக்கும் டிரம்ப்

புதிய மருத்துவமனை 10 நாட்களுக்குள் – சீனா அரசு

சர்வதேச ரீதியில் வஞ்சகமின்றி உயரும் கொரோனா