(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. முன்னதாக இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் கொவிட்-19 தொற்றினால் மரணித்தனர்.
இந்த நிலையில், குருநாகல் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 28 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர், கடந்த தினம் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தார்.
எவ்வாறாயினும், அவரின் கருவில் இருந்த சிசு, அறுவைச் சிகிச்சையின் மூலம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கொவிட்-19 தொற்றுறுதியாகும் கர்ப்பிணித் தாய்மார்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதாகத் துறையினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கருத்து தெரிவித்துள்ள விசேட வைத்தியர் சனத் லெனரோல், கொவிட்-19 தொற்றுறுதியாகும் தாய்மார்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
புதிய கொவிட்-19 திரிபு ஏற்பட்டால், கொவிட்-19 நியூமோனியா ஏற்படும் தாய்மார்கள், தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் நிலைமை மிகவும் அதிகமாகும்.
எனவே, தாய்மார்கள், தாங்கள் பயன்படுத்தும் மருந்துகளை உரியவாறு பயன்படுத்த வேண்டும் என்று விசேட வைத்தியர் சனத் லெனரோல் அறிவுறுத்தியுள்ளார்.
வைத்திய சிகிச்சைகளுக்காக தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தினத்தில், உரியவாறு சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விசேட வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.