(UTV | கொழும்பு) – இன்று முதல் அமுலாகும் வகையில், மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் தயார் நிலையில் உள்ளனர்.
அதற்கமைய, நாடு முழுவதும் உள்ள சதொச விற்பனை நிலையங்களுக்கு எவ்வித தடையும் இன்றி அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சதொச பிரதித் தலைவர் துஷார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
மேலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் தமது நாடளாவிய விற்பனை நிலையங்களுக்கான எரிவாயு விநியோகம் தடையின்றி மேற்கொள்ளப்படும் பிரதான எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அவ்வாறே இந்த பயணத்தடைக்கு மத்தியில், நாடளாவிய ரீதியில் வீடுகளுக்கே மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் மருந்துகளுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
அதேவேளை, பயணத்தடை அமுலாக்கப்பட்டுள்ள காலப்பகுதிகளில் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை தங்கு தடையின்றி முன்னெடுக்க முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.