கிசு கிசு

கொரோனாவும் ரணிலின் ஊடக அறிக்கையும்

(UTV | கொழும்பு) –  கொவிட்-19 கட்டுப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை சகல அதிகாரங்களையும் பெற்று நாட்டு மக்களின் உயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில் நாளொன்றுக்கு 100 மரணங்கள் வரை பதிவாக கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“.. அரசாங்கத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கான தருணம் இதுவல்ல. அதேபோன்று இது அரசியல் போராட்டமும் அல்ல. இது மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான போராட்டம் மாத்திரமேயாகும். எனவே எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக்கொண்டு சிறந்த தீர்மானங்களை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.

கொவிட்-19 தொடர்பில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள குழு தோல்வியடைந்துள்ள நிலையில் , நாட்டு மக்கள் மீது இரக்கம் காணப்பட்டால் அமைச்சரவைக்கு அதிகாரத்தை வழங்கி மேலதிக தீர்மானங்களை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இலங்கையில் கொரோனா பேரழிவு தீவிர நிலையை எதிர்கொண்டுள்ளது. மக்களின் சுகாதார பாதுகாப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருப்பதோடு, ஒட்சிசன், செயற்கை சுவாசக்கருவிகள் , வைத்தியசாலைகளில் சிகிச்சை படுக்கைகள் என்பவற்றில் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் நிரம்பியுள்ளனர். நாளாந்தம் கொவிட் தொற்று அதிகரித்துச் செல்கிறது. தற்போது நாம் தீர்க்கமானதொரு கட்டத்தில் இருக்கின்றோம். மருத்துவ ஆலோசனைகளுக்கு அமைய அடுத்த தீர்மானங்களை எடுக்காவிட்டால், முழு இலங்கையர்களும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

அத்தோடு வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின் படி இலங்கை கொவிட் பரவலில் அவதான மட்டத்திலேயே உள்ளது. குறித்த அறிக்கைக்கு அமைய ஜூன், ஜூலை மாதங்களில் நாளொன்றுக்கு சுமார் 100 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படும். எனவே இந்த தீர்க்கமான கட்டத்தில் நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இது அரசாங்கத்தின் பெயரைப் பாதுகாக்கும் நேரமல்ல. அதே போன்று இது அரசியல் போராட்டமும் அல்ல. இது மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான போராட்டம் மாத்திரமேயாகும். அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் நாம் கூறவில்லை. நாட்டு மக்கள் தொடர்பான பொறுப்பு அமைச்சரவைக்கே காணப்படுகிறது.

எனவே ஜனாதிபதியும் அமைச்சரவையும் முழுமையான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. நாம் இது தொடர்பில் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் , அரசாங்கம் அதற்கேற்ப செயற்படவில்லை. இதன் காரணமாக தற்போது மக்களின் நம்பிக்கை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆகவே தான் அமைச்சரவைக்கு அதிகாரங்களை வழங்குமாறு நாம் கோருகின்றோம். இது தொடபில் இந்த வாரமே பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். அவர்களது ஒத்துழைப்பையும் நிலைப்பாடுகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

அவர்களும் இதற்காக ஒத்துழைப்பை வழங்க வேண்டியுள்ளது. இந்த தொற்று தொடர்பில் துரிதமாக தீர்மானங்கள் எடுக்கப்படாவிட்டால் , பல உயிர்ழப்புக்கள் ஏற்படும். நாட்டு மக்கள் தொடர்பில் இரக்கம் காணப்படுமாயின் அமைச்சரவையின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டு , இதற்கான சிறந்த தீர்மானங்களை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்..”

Related posts

இப்படி உடை அணிந்தது ஏன் என்ற சர்ச்சைக்கு ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா பதிலடி

முஸ்லிம்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்கள் திருட்டு…