(UTV | கொழும்பு) – சீனாவினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சினோபாம் கொவிட் 19 தடுப்பூசியை அவசர தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது.
சினோபாம் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி வழங்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
எவ்வாறாயினும் சினோபாம் கொரோனா தடுப்பூசி சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள 64 பில்லியன் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளன.
பைசர் பயோஎன்டெக், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா, மொடர்னா ஆகிய கொரோனா தடுப்பூசிகளை அவசர தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் முன்னதாக அனுமதி வழங்கியிருந்தது.
இந்தநிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு சினோபாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொவிட் 19 தடுக்கும் இந்த தடுப்பூசியானது 79 சதவீதம் திறன்கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு மாத்திரம் செலுத்தப்பட்ட குறித்த தடுப்பூசியினை நாட்டின் ஏனைய பொதுமக்களுக்கும் செலுத்துவதற்கான நடவடிக்கையினை அடுத்த வாரம் முதல் எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தீவிரமாக பரவி வரும் பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு குறித்த சினோபாம் தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.