(UTV | சென்னை) – கடந்த 2019-ம் ஆண்டு டோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை கோமதி தங்கப்பதக்கம் வென்றார்.
போட்டியின் போது கோமதியிடம் சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரியை பரிசோதனை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர் 2019-ம் ஆண்டு மே மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உலக தடகள சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி கடந்த ஆண்டு மே மாதம் கோமதியின் பதக்கத்தை பறிக்க உத்தரவிட்டதுடன் அவருக்கு 4 ஆண்டுகள் தடையும் விதித்தது.
தான் ஒருபோதும் ஊக்க மருந்து பயன்படுத்தியது கிடையாது என்று மறுத்த கோமதி தன் மீதான 4 ஆண்டுகள் தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் அவரது அப்பீலை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதன் மூலம் கோமதிக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் தடை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் 32 வயதான கோமதி 2023-ம் ஆண்டு மே 16ம் திகதி வரை எந்த போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.