உள்நாடு

அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் [2021.05.03]

(UTV | கொழும்பு) – 2021.05.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்.

01. சீன மக்கள் குடியரசின் வயிற் ஹோஸ் விகாரை வளாகத்தில் இலங்கை சம்பிரதாயத்தைக் கொண்ட பௌத்த விகாரையொன்று அமைத்தல்

சீன மக்கள் குடியரசு மற்றும் இலங்கைக்கும் இடையில் பேணப்பட்டு வரும் நீண்டகால தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் உலகளாவிய பௌத்த மக்களின் வணக்கத்திற்குரிய எமது நாட்டின் சம்பிரதாயத்தைக் கொண்ட பௌத்த விகாரையொன்று சீன மக்கள் குடியரசின் வயிற் ஹோஸ் விகாரை வளாகத்தில் அமைப்பதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளுக்காக அனைத்து நிதியையும் வயிற் ஹோஸ் விகாரையால் பொறுப்பேற்கப்படவுள்ளதுடன், குறித்த கட்டுமானம் இலங்கையின் புத்தசாசன விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும். அதற்கமைய, குறித்த பணிகளுக்காக சீன மக்கள் குடியரசின் வயிற் ஹோஸ் விகாரை மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. க.பொ.த (சாதாரண தரம்) மற்றும் க.பொ.த (உயர் தரம்) பரீட்சைகளை நடாத்தும் காலப்பகுதியை திருத்தம் செய்தல் மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக எடுக்கும் காலத்தைக் குறைப்பதன் மூலம் குறைந்தளவு காலப்பகுதியில் முதலாவது பட்டப்படிப்பை பூர்த்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கல்

க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடல் மற்றும் க.பொ.த (உயர் தரம்) வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கும் இடையே எடுக்கும் காலப்பகுதி மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்காக மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக எடுக்கும் காலம் அதிகரிப்பதால் மாணவர்கள் பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்வதிலும், பல்கலைக்கழக கல்வியைப் பூர்த்தி செய்வதிலும் முறையே அவர்களுடைய வயது முறையே 19-20 மற்றும் 25-26 வயதாகின்றது என்பது தெரியவந்துள்ளது.

இப்பரீட்சை முறையில் இருக்கின்ற கட்டமைப்பு ரீதியான பொருத்தமற்ற தன்மை, நடைமுறையிலுள்ள தொழிநுட்ப விதிமுறைகள் தொடர்பாக நிர்வாக ரீதியான தாமதங்களால் உயர் கல்வியை துரிதமாகப் பூர்த்தி செய்து தொழில் சந்தைக்குப் பிரவேசிப்பதற்கு இளைஞர் யுவதிகளுக்கு தேவையற்ற விதத்தில் காலத்தை செலவிட நேரிட்டுள்ளது. இந்நிலைமை அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியாகவும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் தீமை பயக்குகின்றதென்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், எதிர்வரும் காலங்களில் இந்நிலைமையை தடுப்பதற்காக கீழ்க்காணும் வகையில் நடவடிக்கையெடுப்பதற்காக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10 மற்றும் 11 ஆம் தரங்களின் பாடவிதானங்கள் ஒரு வருடமும் 09 மாத காலப்பகுதிக்கு ஏற்றவாறு மீள்கட்டமைத்தல்

க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சை ஒகஸ்ட் மாதத்திலும், க.பொ.த (உயர் தரம்) பீரட்சை டிசம்பர் மாதத்திலும் நடாத்துவதற்கும் ஒவ்வொரு பரீட்சைகளின் பெறுபேறுகளும் 03 மாதத்திற்குள் வெளியிடப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த செயன்முறைக்காக தற்போது எடுக்கின்ற 45 மாத காலத்தை 32 மாதங்களாகக் குறைப்பதற்கும் அதற்குத் தேவையான தொழிநுட்ப ரீதியான ஏற்பாடுகளை தயாரித்தல்.

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் மீள் பரிசீலனை செய்யும் செயன்முறை மூலம் பெறுபேறு அதிகரிக்கின்ற மாணவர்கள் இருப்பின் அவர்களுக்கான புதிய ணு வெட்டுப்புள்ளி வழங்குவதன் மூலம் குறித்த பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கல் மற்றும் குறித்த பொறிமுறையை 2020 தொடக்கம் நடைமுறைப்படுத்தல்
03. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் ஒகாயாமா பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் மற்றும் உயிரியல் விஞ்ஞானப் பட்டப்படிப்பு நிறுவனம் (Graduate School of Environmental and Life Science) இற்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுதல்.

மாணவர்கள், பீடங்கள் மற்றும் பணியாளர்கள் குழாம் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குபடுத்தல், ஒத்துழைப்பு ஆய்வுகள், கற்பித்தல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளல் மற்றும் ஆய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ளல் போன்ற செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் ஒகாயாமா பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் மற்றும் உயிரியல் விஞ்ஞானப் பட்டப்படிப்பு நிறுவனம் (Graduate School of Environmental and Life Science) இற்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. வாகன விபத்துக்களைக் குறைப்பதற்காக சமூகத்தில் விசேட கவனத்தை ஏற்படுத்துவதற்காக வீதிப் பாதுகாப்பு வாரத்தை பிரகடனப்படுத்தல்

தற்போது நாளொன்றுக்கு 8-10 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பதுடன், அவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாவர். அதனால் அவர்களில் தங்கி வாழ்பவர்கள் நிர்க்கதிக்குள்ளாவதுடன், வருடந்தோறும் குறித்த எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் காணலாம். கடந்த வருடத்தில் 2023 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 2114 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்துக்களில் 963 விபத்துக்கள் இருசக்கர மோட்டார் சைக்கிளுடன் தொடர்புபட்டுள்ளதுடன் அதில் 987 பேர் பலியாகியுள்ளனர்.

முச்சக்கர வண்டிகள் மற்றும் பாரவூர்திகளின் விபத்துக்களால் வருடாந்தம் அண்ணளவாக 500 பேர் வரை பலியாகின்றனர். இவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு, வாகன விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் சர்வதேச தினமான நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் தேசிய பாதுகாப்பு வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கும், வாகன விபத்துக்களைக் குறைப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலை மாணவர்கள், சாரதிகள் மற்றும் பொதுமக்களை தெளிவூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வீதிப் பாதுகாப்பு தொடர்பாக தேசிய வாரத்தை பிரகடனப்படுத்தவும், எதிர்வரும் காலங்களில் வருடாந்தம் நவம்பர் மாதத்தில் இவ்வாறு வாரத்தை நடாத்துவதற்கும் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. நுண்ணிய பிளாஸ்ரிக் ; (Micro Plastic) தொடர்பான ஆய்வு பற்றி ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்துடன் இலங்கை அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுதல்

நுண்ணிய பிளாஸ்ரிக் பாவனையால் சுகாதார, விவசாய, சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளுக்கு கேடு விளைவிக்கின்றமையால், குறித்த திண்மக் கழிவு தொடர்பாக இலங்கை பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. அதுதொடர்பான ஆய்வு நடவடிக்கைகளுக்காக ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானியாவும் வட அயர்லாந்தும் உடன்பாடு தெரிவித்துள்ளதுடன், அதன் மூலம் நுண்ணிய பிளாஸ்ரிக் பற்றிய உள்ளுர் ஆய்வு இயலளவை அதிகரிப்பதற்காக ஒத்துழைப்புக் கிடைக்கும். அதற்கமைய இரண்டு வருடங்கள் அதிகாரம் கொண்ட வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எட்டுவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நகலுக்கு ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உடன்பாடு கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்;தை மேற்கொள்வதற்கும், இலங்கையிலுள்ள ஆய்வு இயலளவை அதிகரித்தல் உள்ளிட்ட பிளாஸ்ரிக் முகாமைத்துவத்தை நோக்காகக் கொண்டு குறித்த விடயத் தலைப்புக்குரிய அமைச்சுக்கள் மற்றும் குறித்த அமைச்சுக்களின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய அனைத்து நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி குழுவொன்றை நியமிப்பதற்கும் சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இந்தியாவின் புதுடில்லி நகரத்தில் அமைந்துள்ள நுர்டு ஆலோசனை சேவை கம்பனிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுதல்

ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறையில் இளைஞர் யுவதிகளைப் பயிற்றுவிப்பதற்காக இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் 1966 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் மாணவர்களுக்கு ஹோட்டல் சேவைகள் துறையில் கல்வி வசதிகளை வழங்குவதற்காக குறித்த நிறுவனத்தின் மாகாண பாடசாலைகள், அநுராதபுரம், பண்டாரவளை, பல்லேகலே, கொக்கல, இரத்தினபுரி, குருநாகல், யாழ்;ப்பாணம் மற்றும் பாசிக்குடா போன்ற நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த துறையில் தனியார் துறையினரின் பாடசாலைகள் வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளதுடன், கடந்த தசாப்த காலத்தில் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் பிம்பம் படிப்படியாக குறைந்துள்ளது. குறித்த நிறுவனத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காகவும் அதன் பிம்பத்தை மேம்படுத்தும் வகையிலும் அந்நிறுவனத்தின் கல்வி நிகழ்சிகளின் தரப்பண்பு தொடர்பான பகுப்பாய்வுடன் கூடிய ஆய்வுக்கற்கையை மேற்கொள்வதற்காக சுவிஸ்சர்லாந்து தூதவராலயத்தின் தலையீட்டுடன், புதுடில்லி நகரத்தில் அமைந்துள்ள நுர்டு ஆலோசனை சேவை கம்பனியின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நுர்டு ஆலோசனை சேவை கம்பனியின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக, குறித்த நிறுவனத்திற்கும் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எட்டுவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. ஸ்மார்ட் ஸ்ரீலங்கா வேலைத்திட்ட நடவடிக்கைகளை மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்திற்கு ஒப்படைத்தல்

தொழில் வழிகாட்டலை தேசிய மட்டத்திலிருந்து பிரதேச மட்டம் வரை ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு செய்தல், புதிய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி புதிய அணுகுமுறைகளின் கீழ் தேசிய நிகழ்ச்சித்திட்டமாக செயற்படும் நோக்கில் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் அப்போதைய ஜனாதிபதி செயலகத்தின் கீழ் அமைச்சரவை அங்கீகாரத்துடன் நிறுவப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் தற்போது விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் விடயத்தலைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தை மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் கீழ் ஒப்படைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

08. நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கொள்கலன்களைப் பயன்படுத்தி வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்கள் (Container Based Cross –Fit Gym) 500 இனை நிறுவுதல்

உற்சாகமான வாழ்க்கை முறைக்கு இளைஞர் பரம்பரையை பழக்கப்படுத்துவதற்காகவும், விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கான உந்துதலை வழங்கும் நோக்கில் ‘வெற்றி கொள்வோம்’ எனும் தொனிப்பொருளில் கொள்கலன்களைப் பயன்படுத்தி வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்கள் (Container Based Cross –Fit Gym) 500 இனை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான மதிப்பீட்டு செலவு 625 மில்லியன்களாவதுடன், திட்டத்தின் மூலம் வருடாந்தம் 100,000 பொதுமக்களுக்கும் 5000 விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கும் நன்மையடைவதுடன், குறித்த தேக ஆரோக்கிய நிலையங்களைக் கொண்டு நடாத்தும் பொறுப்பை பிரதேச ரீதியாக இளைஞர் கழகங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கும் ஒப்படைப்பதற்கும், குறைந்தது ஒரு பயிற்றுவிப்பாளரை ஈடுபடுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டம் 2021-2022 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தவும், 2021 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 250 இடங்களில் கொள்கலன்களைப் பயன்படுத்தி வெளியரங்க உடற்பயிற்சி மற்றும் தேக ஆரோக்கிய நிலையங்களை நிர்மாணிப்பதற்காகவும், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. அகக்கூட்டுயிரியல் பாவனைக்கான ஹியூமன் இமியூனோக்லொபின் பிபீ க்ரூம் 5-6 வயலஸ் 112,500 வழங்கலுக்கான பெறுகை

நோய் எதிர்ப்புக் குன்றிய நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் இம்மருந்தின் பெறுகைக்காக சர்வதேச போட்டி விலைமனுக் கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பெறுகை இந்தியாவின் M/s Reliance Life Science (pvt) Ltd இற்கு 13.10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. முன்நிரப்பப்பட்ட எனக்சபாரின் சோடியம் ஊசிமருந்து 4000 IA+ , 0.4 மில்லிலீற்றர் சிரிஞ்சர் 840,000 வழங்கலுக்கான பெறுகை

இதய நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் இம்மருந்தின் பெறுகைக்காக சர்வதேச போட்டி விலைமனுக் கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பெறுகை இலங்கையின் M/s Slim Pharmaceuticals (pvt) Ltd இற்கு 541.80 மில்லியன் ரூபாய்களுக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. கடலோரப் பகுதியில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்கலன்கள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் முறை

சுற்றுலாத் துறையின் வளர்ச்சியுடன் கப்பல்கள் மூலம் பயணிகள் மற்றும் பண்டங்கள் போக்குவரத்து அதிகரித்துள்ளமையால் கடலோரப் பகுதிகளில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்கலன்களுக்கான ஒழுங்குபடுத்தல்களின் தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, அப்போதிருந்த அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வணிக அமைச்சுடன் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் அவ்வாறனதொரு ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பை தயாரிக்கும் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக லொயிட் றெஜிஸ்ரார் ஏசியா நிறுவனத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த அனைத்துத் தரப்பினரையும் கேட்டறிந்து 04 ஒழுங்குவிதிகள் நகலாக்கப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு 52 ஆம் இலக்க வணிக் கப்பல்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய விடயத்திற்குப் பொறுப்பான குறித்த ஒழுங்குவிதிகளை வெளியிடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நகலாக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கான சட்டவரைஞரின் உடன்பாட்டைப் பெற்றுக் கொள்வதற்கும், பின்னர் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிதற்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் பொருளாதார நிலைமை, இலங்கை மத்திய வங்கியின் நிலைமை மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கை தொடர்ந்துவரும் ஆண்டு ஆரம்பித்து 04 மாதங்களுக்குள் அமைச்சருக்கு கையளிக்கப்பட வேண்டும். அதற்கமைய, 2020 ஆண்டுக்குரிய இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை 2021 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. நாணயச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நிதி அமைச்சர் அவர்களுக்கு குறித்த ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 14 நாட்களில் நிதி அமைச்சர் குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கமைய, 2020 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. கொவிட்-19 தொற்று மூன்றாம் அலையில் PCR பரிசோதனை இயலளவை அதிகரித்தல்

கொவிட் புதிய திரிபு கண்டறிப்பட்ட பின்னர் அரச ஆய்வு கூடங்களில் கொவிட் PCR பரிசோதனைக்கான கேள்வி நாளொன்றுக்கு 20,000 ஆக அதிகரித்துள்ளதுடன், மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களும் உண்டு. அதனால் குறித்த தேவைக்கான PCR பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை துரிதமாகக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

– அரசாங்க தகவல் திணைக்களம்

Related posts

இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகளுக்கு வரி அறவீடு.

புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மருத்துவ ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் !