(UTV | கொழும்பு) – மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து, அரசியல் நாடகத்தை, அரங்கேற்றிக்கொண்டிருக்காமல், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கொழும்பில் இன்று (30) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பாயிஸின் ஏற்பாட்டில் கொழும்பு, தெவட்டகஹ பள்ளிக்கு அருகாமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கொழும்பின் பலபாகங்களிலும் இருந்து வருகை தந்த மக்கள் பங்கேற்றனர்.
“ரிஷாட் பதியுதீனை விடுதலை செய். அநீதியான முறையில் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காதே. நள்ளிரவில் கைது செய்ததன் பின்னணி என்ன?. யாரை திருப்திப்படுத்த இந்தக் கைது?” போன்ற சுலோக அட்டைகளையும், நீளமான பதாதைகளையும் தாங்கியவாறு, சமூக இடைவேளிகளை பேணி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற வேளை பொலிசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித்த சேனாரத்ன, முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த அர்ஷத் நிசாம்தீன், மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரிப்கான், உயர்பீட உறுப்பினர்களான பாயிஸ், தாஹிர், அன்சில், நௌபர் மற்றும் முக்கியஸ்தர்களான ரம்சி, நிஜாம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், சகோதர சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஆகியோர் போராட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட ராஜித்த சேனாரத்ன எம்.பி கருத்து தெரிவிக்கையில்,
“நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை அநியாயமாகக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். அவரின் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது. அவர் முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவர். கட்சித் தலைவராக இருக்கும் அவரை பின்கதவால் வந்து கைது செய்வதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? அவர் என்ன பயங்கரவாதியா? குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்த போதெல்லாம் அவர் தவறாமல் சென்று விசாரணைக்கு ஒத்துழைத்திருக்கின்றார். இது ஒரு பிழையான நடைமுறை. ஜனநாயகத்தை மீறும் செயல். எனவே, அவரை விடுதலை செய்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார்? என்பதை உடனடியாக அறிவியுங்கள்” என்றார்.
போராட்டத்தில் கலந்துகொண்ட முஜிபுர் ரஹ்மான் எம்.பி கருத்து தெரிவிக்கையில்,
“இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தேர்ச்சியாக ரிஷாட் பதியுதீனை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு அழைத்து, போதியளவு விசாரணை செய்தது. எனினும், அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்களையும் நிரூபிக்க முடியாமல் போனது. ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் அவர் விசாரிக்கப்பட்டார். ஆனால், இறுதி அறிக்கையிலும் அவர் குற்றவாளியாக குறிப்பிடப்படவில்லை. இது முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளை பழிவாங்கும், அவர்களை அச்சப்பட வைக்கும் நடவடிக்கை. இதன்மூலம் இந்த அரசு தொடர்பில், எவரும் கேள்வி எழுப்பக் கூடாது என்ற ஒரு மறைமுகமான அச்சுறுத்தலே விடுக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஹரின் மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அச்சுறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யுங்கள் அல்லது அவர் மீது குற்றச்சாட்டு இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள். உங்கள் அதிகார பலத்தை பாவித்து பலாத்காரமான முறையில், பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அவரை தடுத்து வைத்திருக்க வேண்டாம்” என்றார்.