(UTV | இத்தாலி) – இந்தியாவில் கொரோனா வைரஸ் அவசரநிலைக்கு இடையில் பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து வரும் பயணிகளுக்கு இத்தாலி தடை விதித்துள்ளது.
அத்துடன் மேற்கண்ட நாடுகளிலிருந்து அண்மையில் நாட்டுக்கு திரும்பி வந்த குடியிருப்பாளர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட விதிகளையும் இத்தாலி கடுமையாக்கியுள்ளது.
ஏப்ரல் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய கட்டளை ஒன்றில், அந்நாட்டு சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து வருகை தருவோருக்கான தடையை நீட்டித்தார்.
புதிய சட்டத்தின் கீழ், இத்தாலியில் நிரந்தரமாக வாழும் இத்தாலிய குடிமக்கள் மட்டுமே மூன்று நாடுகளில் இருந்து நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
முன்னதாக இத்தாலியில் வசிக்கும் வெளிநாட்டினரும் திரும்பி வர அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து திரும்பும் இத்தாலிய குடிமக்களுக்கு தனிமைப்படுத்தல் விதிகள் தற்சமயம் புதிய சட்டத்தின் கீழ் கடுமையாக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பத்து நாட்கள் ஒரு கொவிட்-19 தனிமைப்படுத்தல் ஹோட்டலில் செலவிட வேண்டும், அங்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் கண்காணிக்கப்படுவர்.
மேற்கண்ட மூன்று நாடுகளிலிருந்து வருகை தரும் இத்தாலிய குடிமக்கள் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பாக பி.சி.ஆர். சோதனை மேற்கொண்டு, அதில் தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.
வருகைக்கு பின்னர் மற்றொரு சோதனையைப் மேற்கொள்ள வேண்டும். இறுதியாக பத்து நாட்கள் தனிமையில் மூன்றாவது சோதனை எடுக்க வேண்டும்.