உள்நாடு

கார்த்தினால் ஆண்டகையினை திருப்திப்படுத்தவா ரிஷாதின் கைது? [VIDEO]

(UTV | மன்னார்) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டாவது நாளாகவும் வட மாகாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி இன்று(29) மன்னாரிலும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தின் போது, மக்கள் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது சகோதரரை சட்டவிரோதமாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்ததாக தெரிவித்து கண்டனங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சுலோக அட்டைகளையும், பதாதைகளையும் தாங்கியவாறு, சமூக இடைவெளிகளை பின்பற்றி, சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாகவே, அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

நேற்றைய தினம் (28) மன்னார் கச்சேரிக்கு முன்னாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எந்தவிதமான, காரணங்களும் கூறாமல், வெறுமனே ஊகத்தின் அடிப்படையில், தமது பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டது, நீதிக்கு முரணானது எனவும், சட்டத்துக்கு விரோதமானது எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ரிஷாட் பதியுதீனுக்கு எந்தவிதமான தொடர்புமில்லை என, அரச இயந்திரத்துக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் நன்கு தெரிந்திருந்த போதும், முன்னர் பல விசாரணைகளிலிருந்து அவர் நிரபராதி என வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும், வேண்டுமென்றே, எவரையோ திருப்திப்படுத்துவதற்காகவும், அரசியல் குரோதங்களை தீர்த்துக்கொள்ளும் வகையில் பழிவாங்குவதற்காகவுமே, இந்த ‘அர்த்தராத்திரிக் கைது’ இடம்பெற்றது” என ஆதரவாளர்கள் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டனர்.

மனிதநேயத்தையும் மனிதாபிமானத்தையும் மதித்து, அதன்படி மக்கள் பணி செய்த தலைவன், எந்தக் காலத்திலும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உதவியதில்லை எனவும், அவர் மீது வீண்பழி சுமத்துவதை விடுத்து, விடுதலை செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வவுனியாவில் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, பொலிசார் தலையீடு செய்து, ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி, மக்களை கலைந்து செல்லுமாறு கூறியதனால், ஆர்ப்பாட்டம் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

எகிறும் கொரோனாவுக்கு பலியாகும் உயிர்கள்

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு

பாராளுமன்றத் தேர்தலுக்கு இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோரின் விபரம் வெளியானது

editor