உள்நாடு

அரசியல் துன்புறுத்தல்கள் இன்றி ரிஷாதிற்கு பிணை வழங்கப்பட வேண்டும்

(UTV | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு அரசியல் துன்புறுத்தல்கள் இன்றி பிணை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி, கடுகன்னாவ பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில், எதிர்க்கட்சி இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் இது அரசியல் பழிவாங்கல் என்றும் எவ்வித உறுதியான ஆதாரங்களும் இன்றி இவரை கைது செய்துள்ளமை கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்திருந்தார்.

“… இதற்கு முன்னரும் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டார். போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவிக்கப்பட்டார். இவர் ஏதும் குற்றங்கள் செய்திருந்தால் அதனை சட்ட ரீதியாக கையாள வேண்டும்.

” அவர் நாட்டில் இருந்து தலைமறைவாகவில்லை. அவருக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி சனிக்கிழமை அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டார். முன்பு இல்லாத சான்றுகள் திடீரென எப்படி வந்தன? ” எனவும் கிரியெல்ல கேள்வி எழுப்பியிருந்தார்.

முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது சகோதரர் கடந்த சனிக்கிழமை(24) அதிகாலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (சீஐடி) கைது செய்யப்பட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த இருவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வுத் துறை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

பிரதமரினால் இன்று விசேட அறிக்கை

உறவினர்களால் அடையாளம் காணப்பட்ட அனுலா ஜெயதிலக்கவின் சடலம்!