உலகம்

பாகிஸ்தான் சொகுசு விடுதியில் குண்டுத்தாக்குதல்

(UTV | பாகிஸ்தான்) – பாகிஸ்தானின் கொயட்டா நகரத்தில் இருக்கும் ஒரு சொகுசு விடுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்து இருக்கின்றனர்.

‘தி செரீனா’ சொகுசு விடுதியில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில், பாகிஸ்தானுக்கான சீன தூதர் இலக்கு வைக்கப்பட்டு இருக்கலாம் என செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

சீன தூதர், ஆஃப்கானிஸ்தான் எல்லையில் இருக்கும் பலூசிஸ்தான் மகாணத்தின் கொயட்டா நகரத்தில் இருந்தார் எனவும், சம்பவம் நடந்த போது சீன தூதர் விடுதியில் இல்லை என்றும் தெரிந்து கொள்ளமுடிந்தது.

பாகிஸ்தானை சேர்ந்த தாலிபன்கள் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்று இருக்கிறார்கள். ஆனால் மேற்கொண்டு எந்த விவரத்தையும் அவர்கள் குறிப்பிடவில்லை.

ஆஃப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இருக்கும் மலைப் பிரதேசங்களில், தாலிபன்கள் உட்பட பல தீவிரவாத இயக்கங்கள், கடந்த சில மாதங்களாக பல தாக்குதலை நடத்தி வருகின்றன.

தாக்குதல் நடந்த பிறகு, அது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அக்காணொளியில் தி செரீனா சொகுசு விடுதியின் கார் நிறுத்துமிடத்தில் தீ பற்றி எரிவது தெரிகிறது.

கொயட்டா நகரத்தில் உள்ள ‘தி செரீனா’ சொகுசு விடுதி, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசு விருந்தினர்கள் தங்க வைக்கப்படுவதற்கு பெயர் போனது.

“வெடி மருந்துகள் நிறைந்த ஒரு கார் விடுதியில் வெடித்திருக்கிறது” என பாகிஸ்தானின் உள் துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மத் ஏ ஆர் ஒய் என்கிற பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தி சேனலிடம் கூறியுள்ளார்.

தாக்குதல் நடந்த நேரத்தில், சீனாவின் தூதர் நோங் ராங் ஒரு விழாவில் இருந்தர் எனவும், அப்போது அவர் சொகுசு விடுதியில் இல்லை எனவும் கூறியுள்ளார் பாகிஸ்தானின் உள் துறை அமைச்சர் ஷேக் ரஷீத்.

பாகிஸ்தான் நாட்டுக்கான சீன தூதரின் கொயட்டா பயணம் வியாழக்கிழமையோடு நிறைவடையும் என பலூசிஸ்தான் மாகாணத்தின் உள் துறை அமைச்சர் ஜியாவுல்லா லங்கோ பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

நீண்ட காலமாக பிரிவினைவாதிகளின் தாக்குதல் நடத்தும் இடமாக இருந்து வருகிறது பலூசிஸ்தான்.

பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தானுக்கு விடுதலை கோருகிறார்கள் தீவிரவாதிகள். அதோடு அப்பகுதியில் வரும் சீன கட்டமைப்புத் திட்டங்களையும் அவர்கள் எதிர்க்கிறார்கள்.

Related posts

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு மட்டுமே பலன் தராது – உலக சுகாதார அமைப்பு தகவல்

பதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்

புரூணை, தனது பயணத் தடை பட்டியலில் இலங்கையினை சேர்த்தது