உள்நாடு

ஆறாத் துயருடன் இரு வருடங்கள் பூர்த்தி

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஈராண்டுகள் பூர்த்தியாகின்றன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி, நாட்டின் பல பகுதிகளில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாயலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம் என்பனவற்றிலும், ஷங்கிரிலா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் உள்ளிட்ட விருந்தகங்களிலும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, பெருமளவானோர் காயமடைந்தனர்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய, தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக, இன்று (21) காலை 8.45க்கு, இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேநேரம், குண்டுத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட ஆராதனை இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, நேற்று பிற்பகல் 4 மணி முதல் இன்று (21) மதியம் 12 மணிவரை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற கட்டுவாபிட்டி தேவாலயத்திலும், இன்று (21) மாலை 6 மணிக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனை இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்று (21) காலை விசேட ஆராதனையுடன், அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

எரிபொருள் விலை சூத்திரம் குறித்த தீர்மானம் நிதி அமைச்சுக்கு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரின் கைப்பேசி பறிமுதல்

மற்றுமொரு காதி நீதிபதி அதிரடியாக கைது!