(UTV | அமெரிக்கா) – செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாக ஹெலிகொப்டரை பறக்க விட்டு நாசா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சிவரன்ஸ் ரோவரை அனுப்பியது.
கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சிவரன்ஸ் ரோவர், செவ்வாய்க் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது.
மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் பெர்சிவரன்ஸ் ரேவர் சேகரித்து வருகிறது. பெர்சிவரன்ஸ் ரோவருடன் சிறிய அளவிலான ஹெலிக்கொப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.
இன்ஜெனியூனிட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹெலிக்கொப்டர் மூலம் செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
இந்த இன்ஜெனியூனிட்டி ஹெலிக்கொப்டரை கடந்த 11 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தில் பறக்கவிட நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால் மென்பொருள் தொடர்பான பிரச்சினையால், திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது செவ்வாய்க்கிரகத்தில், ‘இன்ஜெனியூனிட்டி’ ஹெலிக்கொப்டர் வெற்றிகரமாகப் பறந்ததாக நாசா அறிவித்துள்ளது.
இதன்மூலம் பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில், முதன்முதலாக ஹெலிக்கொப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில்,
இன்று, இன்ஜெனியூனிட்டி ஹெலிகொப்டர் செவ்வாய்கிரத்தை அடைந்தது. இது மற்றொரு கிரகத்தில் பறக்கும் முதல் விமானம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இடைவிடா மன உறுதியுடனும், அமெரிக்காவின் சிறந்த மனதின் சக்தியுடனும், எதுவும் சாத்தியம் என்பதை நாசா மீண்டும் நிரூபித்துள்ளதென தெரிவித்துள்ளார்.