உள்நாடு

பாராளுமன்ற அமர்வுகள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வுகளை இன்று(20) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை முற்பகல் 10.00 முதல் பிற்பகல் 5.30 மணிவரை நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (19) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதியிலிருந்து 2019 நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் பதவி வகித்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள், அரசாங்க கூட்டுத்தாபனங்களின் ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் சேவை உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் அரசியல் ரீதியிலான பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

அன்றையதினம், பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்காது முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இன்று 20 திகதி வெளிநாட்டு செலாவணி சட்டம் கீழான 5 ஒழுங்கு விதிகளும், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு அறிவித்தல்களும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 11 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அன்றையதினம் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான இரண்டு கேள்விகளுக்கு பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதான முன்வைக்கும் கோட்டே நகர எல்லைப் பகுதி தொடர்பான சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாளை, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ள விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமாயச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அன்றையதினம் பிற்பகல் 4.30 மணிமுதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான இரு கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், 4.50 மணி முதல் 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதமும் நடைபெறும்.

Related posts

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் 52 இலட்சத்தை கடந்தது

வெளிநாட்டு தொழில்களில் இருந்து பணம் அனுப்புபவர்களுக்கு மின்சார வாகன உரிமம்

நாட்டில் மீண்டும் இன மோதலா? எச்சரிக்கும் சரத் வீரசேகர.