(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் அரசாங்கத்தின் இலங்கை அரசாங்கத்துடனான விளையாட்டுத்துறை சார் இராஜதந்திர உறவின் ஒரு பகுதியாக, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மது சாத் கட்டாக் அவர்கள் 2021 ஏப்ரல் 9 அன்று டி.எஸ்.சனநாயக்க கல்லூரிக்கு விஜயம் செய்து கிரிக்கெட், ரக்பி மற்றும் கால்பந்து விளையாட்டுப் பொருட்களை பரிசளித்தார்.
உயர் ஸ்தானிகரை கல்லூரியின் அதிபர், பெற்றோர் குழுவின் செயலாளர், விளையாட்டு மற்றும் கல்வி அமைச்சகங்களின் பிரதிநிதிகள் மற்றும் கல்லூரியின் பழைய சிறுவர் சங்கத்தின் பிரதிநிதிகள் அன்புடன் வரவேற்றனர்.கல்லூரியின் கிழக்கு கலாச்சார நடனக் கலைஞர்களின் வண்ணமயமான வரவேற்பு நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய உயர் ஸ்தானிகர், தனக்கும் அவரது குழுவினருக்கும் அன்பான வரவேற்பு அளித்தமைக்கு அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தனது உரையில் “இரு நாடுகளுக்கும் இடையிலான அன்பான நட்பு உறவுகளையும் , பாகிஸ்தானையும் இலங்கையையும் ஒன்றிணைக்கும் ஒரு பொதுவான காரணியாக விளையாட்டு எவ்வாறு இருந்தது என்பதையும் உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், சமூக அறிவியல், ஊடக துறை, சட்டம் போன்ற பல்வேறு துறைகளில் அனைத்து இன மற்றும் மத இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் வழங்கும் முழு நிதியுதவி அளிக்கப்பட அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் குறித்து கல்லூரி மாணவர்களுக்கும் , நிர்வாகத்திற்கும் அவர் விளக்கமளித்ததோடு இப்புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்குமாரும் வேண்டிக்கொண்டார்.
கல்லூரி அதிபர் திரு. பிரசன்னா உதுமுஹந்திரம் கருத்துத்தெரிவிக்கையில், விளையாட்டு பொருட்களை பரிசளித்ததற்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தான் மக்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் மற்றும் மிகவும் கடினமான காலங்களில் இருநாடுகளும் அளித்த ஆதரவு குறித்து தெளிவுபடுத்தினார்.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் இந்நன்கொடையை கல்லூரியின் பெற்றோர் குழுவின் செயலாளரும் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது. விழாவின் முடிவில், உயர் ஸ்தானிகர் கல்லூரியின் தேவாலயம், கோயில் மற்றும் பள்ளிவாயல் ஆகியவைகளை பார்வையிட்டார் .
பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக கல்லூரி பள்ளிவாயலில் சிறப்பு பிரார்த்தனை ஒன்றும் ஏற்பாடு செய்திருந்தது.உயர் கல்வித் தரங்கள், விளையாட்டு வசதிகள் மற்றும் மத மற்றும் இன நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக கல்லூரி நிர்வாகத்தை உயர் ஸ்தானிகர் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.