(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா இனால் முன்வைக்கப்பட்ட உரையினால் இன்று(08) காலை பாராளுமன்றில் சூடான வாத பிரதிவாதங்கள் எழுந்திருந்தன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்றில் இடம்பெற்ற வாதத்திலேயே தனக்கும் அவ்வாறான நிலைக்கு முகங்கொடுக்க நேர்ந்ததாகவும் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கையில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் இடையே கடும் வாதங்கள் இடம்பெற்றிருந்தன.
சரத் பொன்சேகா – “எனக்கு காட்டு நீதிமன்றில் இராணுவ தண்டனை வழங்கப்பட்டது. என்னை 8 மாதம் பிடித்து வைத்திருந்தார்கள். அந்த தண்டனைக்கு மூன்று முறை நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது. மூன்று மேன்முறையீடுகள் இருந்தும் எனக்கு தண்டனை வழங்கப்பட்டது. அன்று அமர்ந்திருந்த சபாநாயகர் என்னை பாராளுமன்றுக்கு வர அனுமதி வழங்கவில்லை..”
அமைச்சர் சமல் ராஜபக்ஷ – ” உங்களுக்கு பாராளுமன்றுக்கு வர நான் தான் அனுமதி வழங்கினேன். உங்களுக்கான தீர்ப்பினை ஆராய்ந்தே நான் நடவடிக்கை எடுத்தேன். பாராளுமன்றுக்கு வருவதற்கு அனுமதி வழங்கவில்லையா?
மேலும் இதன்போது கடுமையாக கோபமடைந்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ, “பொன்சேகா ஒரு கழுதை” முடிந்தால் வெளியே வரவும் என சவால் விடுத்தார்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது, பதாதைகளை எதிரணியினர் ஏந்தியிருந்தனர். அத்துடன், கைகளிலும் கறுப்பு பட்டிகளை அணிந்திருந்தனர்.
இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலை தொடர்ந்து சபையில் அமைதியின்மை நிலவி இருந்தது.