உலகம்

இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுபவர்கள் தலையில் சுடப்படுவார்கள்

(UTV |  மியன்மார்) – மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேர் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மியன்மாரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பெப்ரவரி முதல் நாளில் இராணுவம் கவிழ்த்தது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இராணுவம் முந்தைய ஆட்சியாளர்கள் அனைவரையும் வீட்டு சிறையில் வைத்துள்ளது. இதனிடையே இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் பெப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் இருந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை ஒடுக்க இராணுவம் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட கொடூரமான அடக்கு முறைகளைக் கையாண்டு வருகிறது.

இந்த சூழலில் மியன்மார் இராணுவம் நேற்றுமுன்தினம் ஆயுதப்படை தினத்தை கொண்டாடியது. இதையொட்டி அரசு டிவியில் உரையாற்றிய இராணுவ தலைவர் மின் ஆங் ஹேலிங் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுபவர்கள் தலையில் சுட படுவார்கள் என்றும் பகிரங்க மிரட்டல் விடுத்தார். அதனை மீறியும் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழக்கம் போல் வீதிகளில் இறங்கிப் போராடினர்.‌

அந்த நாட்டின் 2 மிகப் பெரிய நகரங்களான யாங்கூன், மாண்டலே உட்பட 40 இடங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.‌ அமைதியாக தொடங்கிய இந்த போராட்டங்களில் திடீரென வன்முறை வெடித்தது. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன.

இதையடுத்து போராட்டத்தை நசுக்குவதற்கு இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.‌ இதுவரை இல்லாத வகையில் மிகவும் ஆக்ரோஷமாகவும் கண்மூடித் தனமாகவும் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இராணுவ வீரர்கள் போராட்டக்காரர்களை குருவியை சுடுவதுபோல் சுட்டுத் தள்ளினர். இதனால் ஆட்சி கவிழ்ப்பு நடந்த நாளிலிருந்து இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் ஆவர். கொல்லப்பட்டவர்களில் சிறுவர்கள் சிலரும் அடங்குவர். இதனிடையே மியன்மார் இராணுவத்தின் இந்த அடக்குமுறைக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மியன்மார் இராணுவத்தை கண்டித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதேபோல் ஐரோப்பிய கூட்டமைப்பும், ஐநா பொதுச்சபையும் மியன்மார் இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டை வன்மையாகக் கண்டித்துள்ளன.

 

Related posts

நாம் சரிவினை சந்தித்து இருக்கலாம் : பயனாளர்களின் பாதுகாப்பே முக்கியம்

உலகளவில் அதிகரிக்கும் கொரோனா பதிப்பு

நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் – 10 பேர் பலி