(UTV | கொழும்பு) – நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
உலகின் புதிய சந்தை மாற்றங்களுக்கு அமைவாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படவிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (24) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசாமில் நேற்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
இணையத்தள மூலமாக வர்த்தக நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணையத்தள வர்த்தகத்தில் ஈடுபடுவோரை பாதுகாப்பதற்காக சட்டவிதிகள் இந்த திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2003 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதுவரையில் தற்போதைய இணையத்தள வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் முழுமைப்படுத்தப்படவில்லை. பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை தேங்காய் எண்ணெய் சந்தைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து வர்த்தக அமைச்சு நுகர்வோர் அதிகார சபையின் ஊடாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறான தேங்காய் எண்ணெய் சந்தையில் இருக்குமாயின், அதுதொடர்பாக தகவல்களை வழங்கும் உரிமை நுகர்வோருக்கு உண்டு.
தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக சோயா எண்ணெயை அறிமுகப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்று அமைச்சர் கூறினார்ை
(அரசாங்க தகவல் திணைக்களம்)