(UTV | கொழும்பு) – லா லிகா கால்பந்து போட்டியில் நேற்றைய லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி, ரியல் சோசிடாட்டை எதிர்கொண்டது.
கோல் அடித்த மகிழ்ச்சியை பார்சிலோனா அணி வீரர் செர்ஜினோ டெஸ்ட், கெப்டன் மெஸ்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்.
லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஜிபுஸ்கோவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி, ரியல் சோசிடாட்டை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அணி 6-1 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட்டை எளிதில் தோற்கடித்தது.
பார்சிலோனா அணியில் லயோனல் மெஸ்சி, செர்ஜினோ டெஸ்ட் தலா 2 கோலும், அன்டோன் கிரிஸ்மேன், ஒஸ்மானி டெம்பிலி தலா ஒரு கோலும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி (62 புள்ளிகள்) நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்டை (60 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. முன்னாள் சாம்பியனான அட்லெடிகோ மாட்ரிட் 66 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்த போட்டியின் மூலம் பார்சிலோனா கிளப் அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) புதிய சாதனை படைத்தார். அந்த அணிக்காக அவர் விளையாடிய 768-வது ஆட்டம் இதுவாகும். இதன் மூலம் பார்சிலோனா அணிக்காக அதிக போட்டிகளில் ஆடியவர் என்ற பெருமையை மெஸ்சி தனதாக்கினார். இதற்கு முன்பு ஸ்பெயின் முன்னாள் வீரர் ஸாவி ஹெர்னாண்டஸ் அந்த அணிக்காக 767 ஆட்டங்களில் ஆடியதே அதிகபட்சமாக இருந்தது.