உள்நாடு

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ : ஜனாதிபதி நுவரெலியாவுக்கு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொள்ளும் கிராமத்துடன் கலந்துரையாடல் 15வது நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பிரதேச செயலகத்தின் யோம்புவெல்தென்ன கிராமத்தில் இன்று (20) இடம்பெறும்.

காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் இக்கலந்துரையாடலில் மாவட்ட அமைச்சர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், அதிகாரிகள் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துகொள்வார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வை திட்டமிட்டதன் நோக்கம் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளுடன் தாமும் கிராமத்திற்கு சென்று மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக பிரச்சினைகளை அவதானித்து அவற்றை கேட்டு உடனடித் தீர்வை பெற்றுக்கொடுப்பதன் மூலம் கிராமிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதே ஆகும்.

தற்போது நாட்டின் மக்கள் தொகையில் 75 வீதமான கிராமிய மக்கள் நீண்டகாலமாக பல்வேறு பொருளாதார, சமூக பிரச்சினைகளுடனேயே வாழ்கின்றனர்.

காணி பற்றாக்குறை, சிக்கலற்ற காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாமை, குடிநீர் மற்றும் பயிர்ச் செய்கைக்கான நீரை பெற்றுக்கொள்ள முடியாமை, வீதி மற்றும் போக்குவரத்து சிக்கல்கள், சுகாதார மற்றும் கல்வி பிரச்சினைகள், யானை மனித மோதல், அதிகாரிகளின் கவனயீனம் போன்றவை அவற்றில் முதன்மையானதாகும்.

கிராமிய மக்கள் தமது பிரச்சினைகளை இனங்கண்டு அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அடிப்படையாகக்கொண்டு அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அப்பிரச்சினைகள் இந்நிகழ்வில் தீர்த்து வைக்கப்படும். உடனடியாக தீர்க்க முடியாத பிரச்சினைகள் பின்னர் கவனத்தில் எடுத்துக்கொள்ள குறித்து வைத்துக்கொள்ளப்படும்.

கிராமிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒருதரப்பு நியாயங்கள் மட்டும் கவனத்தில் கொண்டு புரிந்துகொள்வது தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதை தாமதப்படுத்தும் என்பதே ஜனாதிபதி அவர்களின் கருத்தாகும். அதிகாரிகள் ஒரு முறையிலும் கிராமத்தினர் வேறு ஒரு முறையிலும் பிரச்சினையை காண்கின்றனர்.

பிரச்சினையின் எல்லா பக்கத்தையும் சரியாக இனங்கண்டு கொள்வதன் மூலம் தீர்வை பெற்றுக்கொடுப்பது இலகுவானதாகவும் உடனடியாக அத்தீர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். இதுவரை நடைபெற்ற “கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்வுகளில் இவ்வாறே பல பிரச்சினைகளுக்கு உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியுமாக இருந்தது.

2020 செப்டெம்பர் 25ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் இருந்து “கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை, பொலன்னறுவை, களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம், திருகோணமலை, குருணாகலை மற்றும் காலி மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இன்று “கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்வுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் யோம்புவெல்தென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு வலப்பனை நகரத்தில் இருந்து 13 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. அது வலப்பனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மிகவும் பின்தங்கிய கிராமமாகும்.

ஊவ வெல்லச போராட்டத்திற்கு பங்களிப்பு வழங்கிய மக்கள் வாழ்கின்ற பாரம்பரிய பிரதேசமாக உள்ள யோம்புவெல்தென்ன கெப்பட்டிபொல நிலமே மீண்டும் சிங்கள இராணுவத்துடன் ஒன்றிணைந்த பிரதேசமாக பிரபல்யம் பெற்றுள்ளது.

மருத்துவ குணம்கொண்ட தாவரமான “யோம்புவெல்” அதிகளவு காணப்பட்டதால் இக்கிராமத்தின் பெயர் உருவானதாக குறிப்பிடப்படுகின்றது. 139 குடும்பங்கள் வசிக்கின்ற யோம்புவெல்தென்ன கிராமத்தின் தற்போதைய சனத்தொகை 397 ஆகும். நெல் மற்றும் மரக்கறி பயிர்ச் செய்கையே இம்மக்களின் பிரதான ஜீவனோபாயமாக காணப்படுகின்றது.

யோம்புவெல்தென்ன, அவற்றை சூழவுள்ள கிராம மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். வீதி, போக்குவரத்து சிக்கல், பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதியின்மை, சுகாதார வசதியின்மை, குடிநீர்ப் பிரச்சினை போன்றவை அவற்றில் சிலவாகும். பயிர்ச் செய்கைக்காக நீரை பெற்றுக்கொள்ள முடியாமை போன்ற பல்வேறு விவசாய பிரச்சினைகளுக்கு அவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர், முறையான தொழிற்பயிற்சி மற்றும் சுயதொழில் முயற்சிகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அப்பிரதேச இளைஞர், யுவதிகள் எதிர்கொள்கின்றனர்.

 

Related posts

எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியை கண்ட இலங்கை

டொலரில் இன்றைய நிலவரம்

சர்வக்கட்சி மாநாட்டில் தமிழ் தேசியகட்சிகள் முன்வைக்கவுள்ள கோரிக்கைகள் …