(UTV | கொழும்பு) – கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான தன்சானியாவின் ஜனாதிபதி ஜோன் மகுஃபுலி (John Magufuli) தமது 61 வயதில் காலமானதாக அந்நாட்டு துணை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அவர் டார் எஸ் சலாம் பகுதியிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று உயிரிழந்ததாக அந்நாட்டு துணை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தன்சானியாவின் ஜனாதிபதி ஜோன் மகுஃபுலி கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் முன் தோன்றியிருக்கவில்லை.
அத்துடன் அவரது உடல்நிலை தொடர்பில் பல வதந்திகள் பரவியிருந்தன.
மேலும் அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக தன்சானியாவின் எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டிருந்த போதிலும் தகவல் உறுதிபடுத்தப்படவில்லை என சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தன்சானியாவில் எதிர்வரும் 14 நாட்களுக்கு தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளதோடு தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தன்சானியா, கொவிட்-19 தொடர்பான தகவல்கள் வெளியிடும் செயற்பாட்டை கடந்த ஆண்டு மே மாதத்துடன் நிறுத்தியிருந்த நிலையில், தடுப்பூசி கொள்வனவுக்கும் மறுப்பு தெரிவித்து விட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.